ஆசிரியர்களுக்கு மே மாதம் ரூ.10,000 எக்ஸ்ட்ரா.. ஊதியம்

சென்னை: மார்ச் 4-
அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.2500 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ.15,000 ஆக உயர்ந்துள்ளது. அதோடு மே மாதத்திற்கு மட்டும் சிறப்பு உதவித் தொகையாக ரூ.10,000 வழங்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பகுதிநேர ஆசியர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வரும் நிலையில், சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில் பகுதி நேர ஆசிரியர்களின் சம்பள உயர்வு குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, தையல், ஓவியம், இசை உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். வாரத்தில் 3 அரை நாட்கள் பணியாற்றும் அவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ.12,500 வழங்கப்படுகிறது. பணி நிரந்தரம் கோரி அவர்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். சமீபத்தில் அவர்கள் தொடர் போராட்டம் நடத்தியபோது, ‘தொகுப்பூதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும். கோடைவிடுமுறையான மே மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்’ என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்தார்.ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சிறப்பு ஆசிரியர் பணி நியமனத்துக்கு தேர்வு நடத்தும்போது, பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு பணிக் காலத்துக்கு ஏற்ப குறிப்பிட்ட போனஸ் மதிப்பெண் அளிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.