
சென்னை: மார்ச் 7-
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சட்டசபைத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக தவெக சார்பாக மகளிருக்கான திட்டங்கள் குறித்து விஜய் இன்று அறிவிப்பை வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் க்யூஆர் கோடுடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் தவெக கூறி இருக்கிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், தவெகவின் அரசியல் செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் சேலம், வேலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தவெக தலைவர் விஜய் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி இருக்கிறார். மறுபக்கம் தவெக விருப்ப மனுக்கள் பெறப்பட்டு நேர்காணல் நடத்தவும் தயாராகி வருகிறார்.
தவெகவுடன் இதுவரை எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்காத சூழலில், தனித்து களமிறங்கவும் தயாராகி வருகின்றனர். அதேபோல் சட்டசபைத் தேர்தலின் ஒரு பகுதியாக தவெக சார்பாக வாக்குறுதிகளும் வெளியிடப்பட்டு வருகிறது. ஏற்கனவே தஞ்சாவூரில் தவெக ஆட்சிக்கு வந்தால், உரத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்வோம். 5 ஏக்கர் நிலம் வரை உள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆராய்வோம். நெல் கொள்முதல் நிலையங்களில் கமிஷனாக பணம் வாங்காமல் பார்த்துக் கொள்ளப்படும். மீனவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும் என்றும் அறிவித்தார். அதேபோல் சாலை வசதி மேம்பாடு, ஒவ்வொரு வீட்டிலும் இருசக்கர வாகனம் என்றும் சில மாதங்களுக்கு முன்பாக காஞ்சிபுரத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று தவெக சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட உள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் மாலை 3 மணிக்கு நடக்க உள்ளது. இந்த விழாவில் பங்கேற்கும் தவெக தலைவர் விஜய் சட்டசபைத் தேர்தலில் தவெகவின் மகளிருக்கான வாக்குறுதிகளை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பாக மகளிருக்கான வாக்குறுதிகள் மிகவும் ஸ்பெஷலாக இருந்தன. மகளிர் உரிமைத் தொகை, விடியல் பேருந்து திட்டம் ஆகியவை மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துவோம் என்று வாக்குறுதி அளித்திருக்கின்றனர். இதனால் விஜய் என்ன வாக்குறுதிகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.















