
புதுடெல்லி: மார்ச் 7-
நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60ம், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.115ம் உயர்த்தப்பட்டுள்ளது. 11 மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து வந்த சூழலில், திடீரென இரவோடு இரவாக உயர்த்தப்பட்டதற்கு என்ன காரணம் என்பதை பார்க்கலாம்.
2024-25ஆம் ஆண்டில் இந்தியாவின் எல்பிஜி நுகர்வு 3.13 கோடி டன்னாக இருந்தது. இதில் 1.28 கோடி டன் எம்பிஜி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள தேவையை பூர்த்தி செய்ய சுமார் 90% வரை வளைகுடா நாடுகளை சார்ந்து இருந்தது. இந்த நிலையில் ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் 8வது நாளாக தொடர்ந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் ஹார்மூஸ் நீரணை கடல் வழித்தடத்தை ஈரான் மூடிவிட்டது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க எஸ்மா அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் அவசர கால உத்தரவை பிறப்பித்துள்ளது. ப்ரோபேன் மற்றும் பூடேன் ரசாயனங்களைப் பயன்படுத்தி எல்பிஜி உற்பத்தியை அதிகப்படுத்த அனைத்து பொது மற்றும் தனியாா் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், இந்த இரு ரசாயனங்களைப் பயன்படுத்தி பெட்ரோகெமிக்கல்களை உற்பத்தி செய்ய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குத் தடை விதித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை ஈரான் மூடிவிட்டதால், பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இதன் காரணமாகவே 30 நாட்களுக்கு ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்தது. இருப்பினும் போதுமான கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி இந்தியாவிடம் கையிருப்பு இருப்பதாக மத்திய அரசு கூறியது.
இருப்பினும் இரவோடு இரவாக எல்பிஜி சிலிண்டர் விலை நாடு முழுவதும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வீட்டில் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.60 உயர்ந்து ரூ.928.50க்கும், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.114.50 உயர்ந்து, ரூ.2,043.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது சாமானிய மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது. கடந்த 11 மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. தற்போது ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த போர் நீடிக்கும் பட்சத்தில் இந்தியா மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.
















