Home செய்திகள் உலக செய்திகள் காலியான வீதிகள் ஆள் இல்லாத அமீரகம்

காலியான வீதிகள் ஆள் இல்லாத அமீரகம்

துபாய், மார்ச் 9- “கட்டியது வெளிநாட்டவர்… வாங்கியது வெளிநாட்டவர்… இன்று பயந்து ஓடுவதும் அதே வெளிநாட்டவர்தான்!”.. அரபு தேசத்தின் ‘வளர்ச்சி’ மந்திரம் இப்போது அஸ்தமிக்கிறதா? என்ற விவாதம் சர்வதேச அளவில் எழுந்துள்ளது. பல தசாப்தங்களாக, “எண்ணெய் வளம் தீர்ந்தாலும் பரவாயில்லை, சுற்றுலாப் பயணிகளை வைத்து உலகையே திரும்பிப் பார்க்க வைப்போம்” என மார்தட்டிய அமீரகத்தின் வியூகம், இன்று அவர்களுக்கே வினையாக மாறியிருக்கிறது. ஒரு நாட்டின் பொருளாதாரம் முழுக்க முழுக்க ‘வெளியாட்களை’ மட்டுமே நம்பி இருந்தால், ஒரு சிறிய சலனம் கூட எத்தகைய சுனாமியை ஏற்படுத்தும் என்பதற்கு தற்போதைய துபாய் ஒரு நேரடி சாட்சி. வெளிநாட்டவர் தயவில் ஒரு சாம்ராஜ்யம்! ஐக்கிய அரபு அமீரகத்தின் ரியல் எஸ்டேட், விருந்தோம்பல் (Hospitality) மற்றும் சில்லறை வர்த்தகம் ஆகிய மூன்று தூண்களும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வரவை வைத்தே வடிவமைக்கப்பட்டவை. சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் முதல் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால்கள் வரை அனைத்தும் ‘விசிட்டர்களை’ குறிவைத்தே கட்டப்பட்டன. ஆனால், இன்று ஈரான் போர், மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது. “Boots on the ground” என்று சொல்லப்படும் நேரடி வாடிக்கையாளர்கள் இல்லாததால், அங்குள்ள தொழில்கள் அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன. ஓட்டல்கள் காலியாக உள்ளன; மால்களில் ஈ ஓட்டாத குறைதான். ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம் நீண்டகாலமாக சுற்றுலா மற்றும் அந்நிய முதலீடுகளை நம்பியே கட்டமைக்கப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில் துபாய் மட்டும் சுமார் 1.96 கோடி (19.59 மில்லியன்) சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து சாதனை படைத்திருந்தது. இருப்பினும், 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சம் காரணமாக இந்த வளர்ச்சி பெரும் சரிவைச் சந்திக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, Oxford Economics போன்ற நிறுவனங்களின் கணிப்புப்படி, 2026-ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 11% முதல் 27% வரை குறையக்கூடும் எனக் கூறப்படுகிறது. இது அமீரகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 12% முதல் 13% வரை பங்களிக்கும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையை நேரடியாகப் பாதித்து, பில்லியன் கணக்கிலான டாலர் இழப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது..