Home மாவட்டங்கள் பெங்களூர் சிலிண்டர் விநியோகம் நிறுத்தத்தால் உணவகங்கள் மூடல்

சிலிண்டர் விநியோகம் நிறுத்தத்தால் உணவகங்கள் மூடல்

பெங்களூரு: மார்ச் 10-
மேற்காசியாவில் அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை சீரடையாமல் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்தால் உணவகங்கள் இன்று முதல் மூடப்படும் சூழல் நிலவுவதாக பெங்களூரு உணவக சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கம் வெளியிட்டுள்ள கடிதத்தில், ‘பெங்களூரு உணவகங்களுக்கான வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஹோட்டல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில் பிரிவு, மக்களுக்கான அடிப்படை தேவைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இதனால் தங்களது அன்றாட உணவுக்கு உணவகங்களை நம்பியுள்ள மாணவர்கள், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவர்.
இத்தகைய நிலையில் நிறுத்தப்பட்டுள்ள வர்த்தக எரிவாயு சிலிண்டர் விநியோகம் வழக்கம் போல சீரடையவில்லை என்றால் ஹோட்டல் தொழில் கடுமையாக பாதிக்கும்.
70 நாட்களுக்கு சிலிண்டர் விநியோகம் சீராகாது என எண்ணெய் நிறுவனங்கள் கொடுத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்த துறை சார்ந்த அமைச்சகம், அரசு, மக்கள் பிரதிநிதிகள் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள காரணத்தால் இன்று (மார்ச் 10) முதல் பெங்களுருவில் உள்ள உணவகங்கள் மூடப்படும் சூழல் உள்ளது. இதனால் இந்த தொழிலை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்’ என பெங்களூரு உணவக சங்க தலைவர் பி.சி.ராவ் அதில் தெரிவித்துள்ளார்.