Home செய்திகள் உலக செய்திகள் எரிவாயு தட்டுப்பாடு: பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை

எரிவாயு தட்டுப்பாடு: பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை

இஸ்லாமாபாத்: மார்ச் 11-
இஸ்ரேல் – ஈரான் போரால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் ஆன்லைன் மூலம் தொடங்கப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கில் ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்திருந்தது. மேலும், தடையை மீறி எண்ணெய் கொண்டு செல்ல நினைத்தால் கப்பலை தாக்கி அழிப்போம் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதன் காரணமாக அமெரிக்கா பாதுகாப்பு கொடுப்பதாக உறுதி அளித்தும் தனியார் சரக்கு கப்பல் நிறுவனங்கள் ஹார்முஸ் வழியாக கப்பல்களை இயக்க தயக்கம் காட்டுகின்றன. இதனால், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
இதனிடையே பாகிஸ்தானில் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தொலைக்காட்சி மூலம் அறிவித்து உள்ளார். அப்போது எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.