
புதுடெல்லி: மார்ச் 11-
முஸ்லிம் பெண்களுக்கு எதிராக உள்ள ஷரியத் சட்டம் போன்ற முரண்பாடுகளுக்கு பொது சிவில் சட்டம் கொண்டு வருதே தீர்வாகும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
முஸ்லிம் பெண்களுக்கு எதிராக உள்ள ஷரியத் சட்டத்தை எதிர்த்து பவுலமி பவனி சுக்லா என்பவர் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், 1937-ம் ஆண்டு ஷரியத் சட்டம் வாரிசு சொத்துகளை வழங்குவதில் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக இருப்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த். நீதிபதிகள் ஜோய்மால்யா பக்சி, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி, ஆண்களுக்கு இணையாக முஸ்லிம் பெண்களுக்கு சமமான சொத்துரிமையை கொண்டுள்ளனர் என்று அறிவித்து ஷரியத் முஸ்லிம் தனிநபர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இதற்கு நீதிபதிகள், சீர்திருத்தம் என்ற பெயரில், முஸ்லிம் பெண்களுக்கு தற்போதுள்ள உரிமைகளும் கிடைக்காமல் போகச் செய்யும் நிலை உருவாகலாம். ஷரியத் சட்டத்தை ரத்து செய்தால், தேவையற்ற வெற்றிடம் உருவாகாதா? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
நீதிபதி ஜோய்மால்யா பக்சி கூறும்போது, “முஸ்லிம் பெண்களுக்கு எதிரான பாகுபாடு குறித்து இந்த நல்ல விவகாரத்தை, வழிகாட்டும் கோட்பாடுகளின்படி அரசமைப்பு சாசனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள பொது சிவில் சட்டமியற்றும் அதிகாரத்தை படைத்த நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளிடம் விட்டுவிடுவது பொருத்தமாக இருக்காதா” என்று கேட்டார். அப்போது, தலைமை நீதிபதி, இதற்கு தீர்வு பொது சிவில் சட்டம் கொண்டு வருவதாகும் என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே பொது சிவில் சட்டத்தை இயற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது” என்று குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, உரிய திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி அளித்து விசாரணையை உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.


















