
கீவ்: மார்ச் 13-
அமெரிக்காவும் உக்ரைனும் இணைந்து ட்ரோன்களை தயாரிக்க திட்டமிட்டு உள்ளன என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக தனியார் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனை, ரஷ்யா ஆக்கிரமித்தது. அப்போது முதல் ஈரானின் ஷாஹெட் ட்ரோன்களை ரஷ்ய ராணுவம் போரில் பயன்படுத்தி வருகிறது.ஒரே நேரத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தின. இதனால் உக்ரைனில் பெரும் சேதங்கள் ஏற்பட்டன. ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க மிகக் குறைந்த விலையில் நாங்களே ட்ரோன்களை தயாரித்தோம். இதன்மூலம் ரஷ்ய ராணுவத்தின் ட்ரோன் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்து வருகிறோம்.
தற்போது மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து உள்ளது. அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. ட்ரோன் தாக்குதல்களை முறியடிப்பதில் உக்ரைன் ராணுவம் நிபுணத்துவம் பெற்றிருக்கிறது. எனவே ஈரானின் ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க உக்ரைன் ராணுவத்தின் உதவியை அமெரிக்கா நாடியிருக்கிறது.
எங்கள் நாட்டில் இருந்து 3 சிறப்பு குழுக்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு சென்று உள்ளன. இந்த குழுக்களில் தொழில்நுட்ப நிபுணர்கள், ராணுவ அதிகாரிகள், இன்ஜினீயர்கள் இடம் பெற்று உள்ளனர். அமெரிக்காவும் உக்ரைனும் இணைந்து ட்ரோன்களை தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இதுதொடர்பான பரிந்துரையை அமெரிக்க அதிபர் மாளிகையிடம் கடந்த ஆண்டு வழங்கினோம். அமெரிக்க அதிபர் மாளிகை ஒப்புதல் அளித்த பிறகு இரு நாடுகளும் இணைந்து ட்ரோன்களை தயாரிக்கும். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வாங்குவதை உலக நாடுகள் முழுமையாக தவிர்க்க வேண்டும். இதை கண்டிப்புடன் பின்பற்றினால் உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்.ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான பொருளாதார தடையை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஒருபோதும் நீக்கக்கூடாது. ரஷ்யாவின் கச்சா எண்ணெய் விற்பனை அதிகரித்தால் அந்த நாடு மேலும் வலுவடையும். இதை தடுக்க அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஓரணியாக செயல்பட வேண்டும். ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை மேலும் கடுமையாக்க வேண்டும். இவ்வாறு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
















