Home மாவட்டங்கள் பெங்களூர் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் ஒப்புதல், நிதியுதவி – மோடிக்கு முதல்வர் கடிதம்

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் ஒப்புதல், நிதியுதவி – மோடிக்கு முதல்வர் கடிதம்

சென்னை: மார்ச் 13-
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திடவும், ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களின் நிறைவேற்றத்தை உறுதி செய்திடவும் ஏதுவாக, ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கவும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு (கட்டம்-3) ஒப்புதலையும், நிதியுதவியையும் வழங்கிட வேண்டுமென்றும் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது; தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான குடிநீர் வழங்குவதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் உள்ளது எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், கிராமப் பகுதிகளிலுள்ள 1.25 கோடி வீடுகளில், 1.12 கோடி வீடுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும் குழாய்கள் மூலம் இணைப்புகளை வழங்கி, ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழ்நாடு பெருத்த முன்னேற்றத்தைச் சாதித்துள்ளதாகவும், இதற்கிடையில் இந்த இயக்கத்தினை மேலும் விரிவாக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள முடிவினை வரவேற்கிறேன்.
ஜல் ஜீவன் மிஷன் இயக்கத்தின் முதல் கட்டத்தில், தமிழ்நாடு 45 புதிய பல கிராமங்களை உள்ளடக்கிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களையும், 56 பழைய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களையும் மற்றும் 21,258 ஒற்றை கிராமத் திட்டங்களையும் மொத்தமாக 18,123 கோடி ரூபாய் செலவில் எடுத்துள்ளதாகவும், அவற்றில் அனைத்து ஒற்றை கிராம குடிநீர்த் திட்டங்கள், பல கிராமங்களை அடக்கிய 101 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மற்றும் பழைய குடிநீர்த் திட்டங்களில் புனரமைப்புத் திட்டங்களாக 92 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் மகிழ்ச்சியோடு தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.