
புதுவை: ஏப்ரல் 4-
புதுவை சட்டசபை தேர்தலையொட்டி வரும் ஏப்ரல் 6ஆம் தேதி புதுவையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்கிறார். அன்றைய தினம் திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலினும் பிரச்சாரம் செய்கிறார். இருவரும் ஒரே நாளில் பிரச்சாரம் செய்யும் போதிலும் இருவரும் தனித்தனியே பிரச்சாரம் செய்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு வேட்புமனுதாக்கல் முடிவடைந்துவிட்டது. கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். புதுவையில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் திமுக 14 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ள போதிலும் 5 தொகுதிகளில் இரு கட்சிகளும் போட்டியிடுகின்றன. திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் பிரமுகர்கள் வாபஸ் பெற மறுப்பு தெரிவித்திருந்தனர். இதனால் திமுக காங்கிரஸ் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. அது போல் விசிக போட்டியிடும் தொகுதியிலும் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் வரும் 6ஆம் தேதி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பிரச்சாரம் செய்கிறார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அன்றைய தினம் ஸ்டாலினும் புதுவையில் பிரச்சாரம் செய்கிறார்.
ராகுல் காலையிலும் ஸ்டாலின் மாலையிலும் பிரச்சாரம் செய்கிறார்கள். இருவரும் ஒரே நாளில் பிரச்சாரம் செய்தாலும் தனித்தனியே செய்கிறார்கள். தமிழக சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீட்டின் போதிலிருந்தே திமுக- காங்கிரஸ் இடையே பிரச்சினை எழுந்தது.
41 தொகுதிகள், ஆட்சியில் பங்கு உள்ளிட்ட காங்கிரஸின் கோரிக்கைகளை ஏற்க திமுக மறுத்துவிட்டது. மேலும் காங்கிரஸ் நிர்வாகிகளான மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரை கட்சி தலைமை கண்டிக்கவில்லை என்று திமுகவுக்கும் கோபம் இருந்தது. இந்த நிலையில் ஸ்டாலின் பிறந்தநாளில் கூட கடந்த முறை சகோதரர் என குறிப்பிட்டிருந்த ராகுல் காந்தி, இந்த முறை ஸ்டாலின் சார் என குறிப்பிட்டிருந்தது அவருக்கு திமுக மீதான கோபத்தை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


















