
வாஷிங்டன்: ஏப்ரல் 27-
ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தனது சிறப்புத் தூதர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திடீரென ரத்து செய்துள்ளார்.
ஈரானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பாக அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ஈரான் தரப்புடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் செல்ல இருந்தனர்.இந்நிலையில், கடந்த சனிக்கிழமை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீரை மட்டும் சந்தித்துப் பேசினார். அத்துடன் அமெரிக்க பிரதிநிதிகளுடன் எந்தச் சந்திப்பும் திட்டமிடப்படவில்லை.
எங்கள் தரப்பு நிலைப்பாட்டை பாகிஸ்தானிடம் கூறியருக்கிறோம். அவர்கள்தான் அமெரிக்காவிடம் கூற வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, ஈரானிய தூதுக் குழுவினர் பாகிஸ்தானில் இருந்து வெளியேறினர்.
இதுகுறித்து ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: பயணத்துக்காக அதிக நேரம் வீணடிக்கப்படுகிறது. இங்கே செய்ய வேண்டிய வேலைகள் அதிகம் உள்ளன. ஈரானியத் தலைமையிடம் பெரும் குழப்பமும் மோதலும் நிலவுகிறது. தங்களுக்கு யார் தலைமை தாங்குகிறார்கள் என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே, சிறப்புத் தூதர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பும் திட்டம் இல்லை. அனைத்து சாதகமான அம்சங்களும் நம்மிடமே உள்ளன.
அவர்கள் பேச விரும்பினால், எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம். பேச்சுவார்த்தையை ரத்து செய்த பிறகு ஈரான் தனது கோரிக்கைகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. ஆனால் அது போதுமானதாக இல்லை. ஒப்பந்தம் எட்டப்படும் வரை ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடரும். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.சீனாவுக்குத் தடை இந்நிலையில், ஈரானிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெய் வாங்கியதாகக் கூறி சீனாவைச் சேர்ந்த ‘ஹெங்லி பெட்ரோ கெமிக்கல்‘ நிறுவனத்தின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது


















