
துபாய்: ஏப்ரல் 30
முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் மற்றும் ஒபெக் பிளஸ் குழுக்களில் இருந்து மே 1-ம் தேதி முதல் விலகுவதாக அமீரகம் அறிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரி்க்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதால் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் தடைபட்டு அதன் விலை உயர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில் முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் மற்றும் ஒபெக் பிளஸ் குழுக்களில் இருந்து மே 1-ம் தேதி முதல் விலகுவதாக ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அறிவித்துள்ளது.
தனது உற்பத்தித் திறனை அதிகரிக்க சமீபத்தில் மேற்கொண்ட முதலீடுகளைத் தொடர்ந்து, வளர்ந்து வரும் உலகளாவிய எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய இந்த முடிவு உதவும் என்று யுஏஇ தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த வெளியேற்றம், ஒபெக் அமைப்பு ‘உலகையே ஏமாற்றுகிறது’ என்று விமர்சித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தொடங்குவதற்கு முன்பு, ஜனவரி மாதத்தில், சவுதி அரேபியா மற்றும் பிற ஒபெக் நாடுகளிடம் எண்ணெய் விலையைக் குறைக்குமாறு ட்ரம்ப் கேட்டுக் கொண்டதுடன், இறக்குமதி வரிகளைப் பயன்படுத்துவேன் என்றும் எச்சரித்திருந்தார்.
இதுகுறித்து எம்எஸ்டி ஃபைனான்சியல் நிறுவனத்தின் எரிசக்தி ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் சவுல் கவோனிக் கூறும்போது, “இது இந்த கூட்டணியின் முடிவின் ஆரம்பம்., ஐக்கிய அரபு அமீரகம் வெளியேறுவதால், ஒபெக் தனது உற்பத்தித் திறனில் சுமார் 15%-ஐ இழக்கிறது, மேலும் அதன் மிகவும் இணக்கமான உறுப்பினர்களில் ஒருவரை இழக்கிறது” என்றார். சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) முன்னாள் அதிகாரி நீல் அட்கின்சன் கூறும்போது, “போர் முடிந்து இயல்புநிலை திரும்பும்போது, விலையைத் தீர்மானிக்கும் ஒபெக் அமைப்பின் திறன் தெளிவாக பலவீனமடையும்” என்றார்.முக்கிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கவும், நிலையான வருவாயை உறுதி செய்யவும் 1960-ம் ஆண்டில் ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா மற்றும் வெனிசுலா ஆகிய 5 நாடுகளால் ஒபெக் உருவாக்கப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகம் 1967-ல் இணைந்தது. மேலும் சில நாடுகளும் இணைந்தன. மொத்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 12 ஆக இருந்தது. யுஏஇ வெளியேறினால் உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 ஆக குறையும். ஒபெக் பிளஸ் கூட்டமைப்பில் ரஷ்யா உள்ளிட்ட மேலும் 10 நாடுகள் உள்ளன.



















