
தெஹ்ரான், ஏப்ரல் 27- அமெரிக்கா – ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தை மற்றும் சமாதான முயற்சிகள் ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கவுள்ளார். பேச்சுவார்த்தை தொடர்பாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்குச் சென்று வந்த அப்பாஸ் அராக்சி ஓமானுக்கும் சென்றார். இந்தச் சூழலில், அவர் இன்று (ஏப்ரல் 27) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக ஈரான் தூதர் தெரிவித்துள்ளார்.
“போர் நிலவரங்கள் குறித்து விவாதிக்க விளாடிமிர் புதினுடனான சந்திப்பு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்,” என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியதாக ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் மத்தியஸ்தர்கள் மூலமாக ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஒரு புதிய முன்மொழிவை ரஷ்யா அமெரிக்காவிடம் வழங்கியது. இதுகுறித்து அமெரிக்கா முடிவெடுக்காததால் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. ஈரானின் உயர்மட்ட தூதர் பாகிஸ்தானை விட்டு வெளியேறியதாலும், பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியதை அடுத்து அமெரிக்க தூதர்கள் வராததாலும், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வியடைந்தன. இதுபற்றி பேசிய ட்ரம்ப்,” வெறுமனே உட்கார்ந்து அர்த்தமற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுவதில் பயனில்லை. ஆனாலும் போர் உடனடியாக மீண்டும் தொடங்காது” என்று குறிப்பிட்டார். இதனையடுத்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுடன் தொலைபேசியில் பேசி, மாறிவரும் பிராந்திய சூழல் குறித்து விவாதித்தார். ஐம்பது நிமிடங்கள் நீடித்த அவர்களின் உரையாடலின் போது, தற்போதைய பிராந்திய நிலைமை மற்றும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்து இரு தலைவர்களும் விரிவான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டனர் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.



















