
வாஷிங்டன், ஏப்ரல் 27- நேற்று இரவு வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடந்த ‘வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்க’ விருந்து நிகழ்ச்சியின் போது, திடீரென துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் நல்வாய்ப்பாக டிரம்ப் உயிர் தப்பினார். ஆனால் டிரம்பை குறி வைத்து இதற்கு முன்னரும் பல தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட சமீபத்திய துப்பாக்கிச் சூடு முயற்சி மற்றும் அவரது அரசியல் பயணத்தில் அவர் எதிர்கொண்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பற்றி விரிவாக பார்ப்போம். நேற்று என்ன நடந்தது? நேற்று இரவு விருந்து நிகழ்ச்சியின் போது பாதுகாப்பு சோதனைச் சாவடி அருகே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. உடனடியாக சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் டிரம்ப், மெலனியா டிரம்ப் மற்றும் ஜே.டி. வேன்ஸ் ஆகியோரைப் பாதுகாப்பாக வெளியேற்றினர். சந்தேகத்திற்குரிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியால் சுடப்பட்டாலும், குண்டு துளைக்காத புல்லட் புரூப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் உயிர் தப்பினார். கடந்த சில மாதங்களில் இதுபோன்று ஏராளமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம், மார்-ஏ-லாகோ இல்லத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற 21 வயது இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டார். தாக்குதல் முயற்சி அதேபோல கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், டிரம்பின் விமானம் (Air Force One) நிறுத்தப்படும் இடத்தைக் குறிவைத்து வேட்டை மேடை (Hunting stand) அமைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. வேட்டை மேடை என்பது, ஸ்னைப்பர் துப்பாக்கியை பயன்படுத்தி நீண்ட தூரத்திலிருந்து இலக்கை கூட அமைக்கப்படும் இடமாகும். இது தரையிலிருந்து 10-20 உயரத்தில் அமைக்கப்பட்டிருந்து. இதை கண்டுபிடித்த அதிகாரிகள், பெரிய அசம்பாவிதத்தை தவிர்த்தனர். அதேபோல கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம், புளோரிடா கோல்ஃப் மைதானத்தில் ரயான் வெஸ்லி ரவுத் என்பவர் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார்.



















