
சென்னை, மே 9-
தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். நாளை காலை 10 மணிக்கு முதல்வராக விஜய் பதவியேற்கிறார். மூன்று நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் கெடு விதித்துள்ளார். திங்கள் கிழமையன்று எம்.எல்.ஏக்கள் பதவியேற்க உள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் 2026 தகவல்களுக்கு ஒன்இந்தியா தமிழுடன் இணைந்திருங்கள்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய பிறகு, மாநில அரசியலில் கூட்டணி மற்றும் ஆட்சி அமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், தனித்து ஆட்சி அமைக்க தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாததால், மற்ற கட்சிகளின் ஆதரவை பெற தவெக தரப்பு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. காங்கிரஸ் கட்சி தனது 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை தவெகவுக்கு வழங்குவதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் நேற்று தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து அரசியல் வட்டாரத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தின. முஸ்லிம் லீக் கட்சி ஆதரவளிப்பதாக கூறியிருந்த நிலையில், ஆதரவில்லை என மறுப்பு தெரிவித்திருந்தது. விசிக தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்று முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெகவுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துள்ளது. இந்த சூழலில், பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கும் வகையில் விஜய் இன்று ஆளுநரை சந்திப்பதற்காக தவெக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் விஜய் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். ஆனால், பாதி வழியிலேயே விஜய் தனது பயணத்தை நிறுத்தி திரும்பியதாக தற்போது தகவல்கள் வெளியாகின.இதற்கிடையில், தமிழக ஆளுநரின் கேரள பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் ஆளுநரை விஜய் சந்தித்துள்ளார். சுமார் 2 மணி நேரம் வரை இந்த சந்திப்பானது நடைபெற்றது. தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்த விஜய் உற்சாகத்துடன் மக்களை நோக்கி கையசைத்தப்படியே வந்தார்.
தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். நாளை காலை 10 மணிக்கு முதல்வராக விஜய் பதவியேற்கிறார். திங்கள் கிழமையன்று எம்.எல்.ஏக்கள் பதவியேற்க உள்ளனர். இதனால் தவெகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.


















