
அபுதாபி: மே 18-
ட்ரோன் தாக்குதல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அணு மின் நிலையத்தில் தீப்பற்றியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கதிர்வீச்சு பாதிப்பும் ஏற்படவில்லை.
ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்திய போது ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், நாங்கள் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் பகிரங்கமாகவே எச்சரித்தது.தற்போது சண்டை நிறுத்தம் அறிவித்து ஈரானுடன் அணு ஆயுததடை ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஹார்முஸ் ஜல சந்தியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது. ஈரானும் ஹார்முஸ் ஜல சந்தியில் கப்பல் போக்குவரத்தை அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்தாமல் குழாய் மூலமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதியை இரு மடங்காக அதிகரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் அபுதாபியின் அல் தப்ரா பாலைவனப் பகுதியில் அமைந்துள்ள பராக் அணு மின் நிலையம் மீது நேற்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அணுமின் நிலைய வளாகத்தின் ஜெனரேட்டர் அறையில் தீப்பற்றியது. இதில் யாரும் காயம் அடையவில்லை. கதிரியக்க பாதிப்பும் ஏற்படவில்லை. இங்குள்ள 4 அணு உலைகள் சீராக இயங்கி வருகின்றன. இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஈரான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.




















