Home செய்திகள் தேசிய செய்திகள் மின்சாரக் கட்டணத்தில் அதிரடி மாற்றம்?

மின்சாரக் கட்டணத்தில் அதிரடி மாற்றம்?

டெல்லி, மே 19- நாடு முழுவதும் மின்சாரக் கட்டண அமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வர மத்திய மின்சார ஆணையம் (CEA) பரிந்துரை செய்துள்ளது. இதன் படி, பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களின் மாதாந்திர மின் கட்டணத்தில் செலுத்தும் ‘நிலையான கட்டணம்’ (Fixed Charges) கணிசமாக உயரக்கூடும். நுகர்வோர் எவ்வளவு மின்சாரத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கடந்து, இந்த கட்டாய மாதாந்திரக் கட்டணத்தை அதிகமாகச் செலுத்த வேண்டிய நிலை விரைவில் ஏற்படலாம். தற்போது மின் விநியோக நிறுவனங்கள் (Discoms) சந்தித்து வரும் கடுமையான நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் நோக்கில் இந்த அதிரடி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை விரைவில் மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களின் கூட்டமைப்பின் (Forum of Regulators) ஒப்புதலுக்காகவும், அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் செயல்படுத்துவதற்காகவும் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நிதி நெருக்கடியில் மின் நிறுவனங்கள்: காரணம் என்ன? மத்திய மின்சார ஆணையத்தின் (CEA) ஆய்வின்படி, மின் விநியோக நிறுவனங்களுக்கு ஏற்படும் ஒட்டுமொத்த செலவில், மின்சாரக் கடத்தல் (Transmission), ஊழியர்களின் சம்பளம், உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் மின் உற்பத்தி நிலையங்களுக்குச் செலுத்தப்படும் தொகைகள் ஆகியவை மட்டுமே சுமார் 38% முதல் 56% வரை பங்களிக்கின்றன. ஆனால், இந்த நிலையான செலவுகளுக்குப் ஈடாக, நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்படும் ‘நிலையான கட்டணம்’ (Fixed Charges) மூலம் மின் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் வருவாய் வெறும் 9% முதல் 20% வரை மட்டுமே உள்ளது. பெரும்பாலான நிலையான செலவுகளை, நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தில் சேர்த்தே மின் நிறுவனங்கள் இதுவரை வசூலித்து வருகின்றன. இதன் காரணமாக, மின்சாரப் பயன்பாடு குறையும் போதெல்லாம் மின் நிறுவனங்களின் வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நிதிப் பற்றாக்குறை ஏற்படுகிறது.