
புது டெல்லி: மே 19 –
உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்தவர் தீபிகா (25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரித்திக் தன்வாருக்கும் கடந்த 2024 டிசம்பரில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பெண் வீட்டார் தரப்பில் ரூ.1 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டது. குறிப்பாக மணமகனுக்கு ரூ.11 லட்சம் ரொக்கம், ஒரு ஸ்கார்பியோ கார் ஆகியவை வழங்கப்பட்டன.
ஆனால் திருமணத்துக்கு பிறகு கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு தீபிகாவை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர். ரூ.60 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த கார், ரூ.51 லட்சத்தை ரொக்கமாக தர வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த சூழலில் நேற்று முன்தினம் கிரேட் நொய்டாவில் உள்ள கணவரின் வீட்டின் மாடியில் இருந்து தீபிகா கீழே குதித்தார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து கணவர் ரித்திக் தன்வார், அவரது தந்தை மனோஜ் ஆகியோரை கைது செய்தனர். இதுதொடர்பாக தீபிகாவின் தந்தை தீபக் நராங் கூறும்போது, “எனது மகள் மரணத்தில் மர்மம் இருக்கிறது. இது தற்கொலையா,கொலையா என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.
கணவர் வீட்டாருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்’’ என்றார். எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல. தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் அதில் இருந்து மீள தொடர்புகொள்ளவும்: மாநில உதவி மைய எண்: 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 – 24640050.

















