Home தலைப்பு செய்தி காங்கிரஸ் அரசு சாதனை மாநாடு

காங்கிரஸ் அரசு சாதனை மாநாடு

தும்கூர்: மே 19-
துமகூருவில் காங்கிரஸ் அரசின் சாதனை விளக்க மாநாடு நடைபெற்றது 1.52 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கி புதிய சாதனை படைக்கப்பட்டது.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்று நாளை (மே 20) மூன்று ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, ‘கற்பதரு நாடு’ என்று அழைக்கப்படும் துமகூருவில் பிரம்மாண்ட சாதனை விளக்க மாநாடு நடைபெற்றது. “முன்னோக்கி கர்நாடகா – அர்த்தமுள்ள சேவை” என்ற பெயரில் நடைபெற்ற இந்த மாநாட்டில், கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு செய்துள்ள சாதனை மற்றும் வளர்ச்சித் திட்டங்களை மக்கள் முன்னிலையில் காங்கிரஸ் தலைவர்கள் பட்டியலிட்டனர். இதன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அவர்கள் தேர்தல் முழக்கமிட்டுள்ளனர்.
விரைவில் வரவிருக்கும் பெங்களூரு மேம்பாட்டு ஆணைய தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்கள், மாவட்ட, தாலுகா மற்றும் கிராம பஞ்சாயத்து தேர்தல்கள், மற்றும் 2028-ம் ஆண்டு பொதுத்தேர்தல் ஆகியவற்றை மனதில் வைத்து, காங்கிரஸ் கட்சி இந்த மாநாட்டின் மூலம் தனது பலத்தை நிரூபித்துள்ளது. பா.ஜ.க மற்றும் ஜே.டி.எஸ் ஆகிய எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் இந்த மாநாடு அமைந்திருந்தது.
கடந்த 3 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு அறிவித்த ‘அரசு உத்தரவாத திட்டங்கள்’ உட்பட பல்வேறு நலத்திட்டங்களை சுட்டிக்காட்டிய தலைவர்கள், “சொன்னதைச் செய்த அரசு” தங்களது அரசு என்று பெருமிதத்துடன் கூறினர். மாநாட்டில் திரண்டிருந்த பெருந்திரளான மக்களிடம், வரவிருக்கும் அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மற்றும் உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி.பரமேஸ்வர் ஆகியோர் மறைமுகமாக கோரிக்கை விடுத்தனர்.
துமகூரு அரசு ஜூனியர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில், முதல்வர் சித்தராமையா வருவாய்த்துறையின் பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் 1,52,492 பயனாளிகளுக்கு பட்டாக்கள் மற்றும் நலத்திட்ட ஆணைகளை வழங்கினார். இதில் இ-பவுதி இயக்கம், தர்காஸ்து போடி, வருவாய் கிராம பட்டாக்கள் மற்றும் போடி முக்தி இயக்கம் ஆகிய திட்டங்கள் அடங்கும்.

அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி நியமன ஆணை

மாநில வரலாற்றிலேயே இல்லாத அளவாக, ஒரே மேடையில் 600 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் சித்தராமையா வழங்கி புதிய சாதனை படைத்தார்.
துமகூரு மாவட்டத்தில் சுமார் ரூ.662.35 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முதல்வர் சித்தராமையா பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும் பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை, சமூக நலத்துறை, மின்சாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

கின்னஸ் சாதனைப் புத்தகம்

பொதுமக்களுக்கு வருவாய்த்துறை மூலமாக பட்டாக்கள் மற்றும் சேவைகளை விரைவாக வழங்கியதில் துமகூரு மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளது. இந்த இமாலய சாதனையை பாராட்டி, லண்டனைச் சேர்ந்த கின்னஸ் உலக சாதனை அமைப்பு, இந்த மாநாட்டில் மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரப்பூர்வமாக ‘கின்னஸ் சான்றிதழை’ வழங்கி கௌரவித்தது. கர்நாடக அரசின் இந்த சாதனை மாநாட்டில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.