
லக்னோ, மே 25- ஐபிஎல் போட்டியில் சேஸிங்கின்போது சதம் விளாசிய 4-வது வீரர் என்ற பெருமையை பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பெற்றுள்ளார். நேற்று முன்தினம் லக்னோவில் நடைபெற்ற லீக் போட்டியின்போது பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியின்போது பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 51 பந்துகளில் 11 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் ஐபிஎல் போட்டி சேஸிங்கின்போது சதம் விளாசிய 4-வது கேப்டன் என்ற பெருமையை ஸ்ரேயஸ் ஐயர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு விரேந்தர் சேவாக் (2011 டெக்கான் சார்ஜர்ஸுக்கு எதிராக 119), விராட் கோலி (2016-ல் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்டுக்கு எதிராக 108), சஞ்சு சாம்சன் (2021-ல் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 119) ஆகியோரும் இந்த பெருமையைப் பெற்றிருந்தனர். தற்போது அந்தப் பட்டியலில் ஸ்ரேயஸ் ஐயரும் இணைந்துள்ளார். 3-வது கேப்டன்: மேலும், ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக சதம் விளாசிய 3-வது கேப்டன் என்ற சாதனையையும் ஐயர் படைத்துள்ளார். இதற்கு முன்பு பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல்(2020-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 132), ஆடம் கில்கிறைஸ்ட் (2011-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 106) ஆகியோர் இந்த சாதனையைப் படைத்திருந்தனர்.





















