
தரம்சாலா, மே 26- ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தரம்சாலாவில் நடைபெறும் தகுதி சுற்று 1-ல் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இரு அணிகளுமே லீக் சுற்றை தலா 18 புள்ளிகள் பெற்று முதல் இரு இடங்களுடன் நிறைவு செய்திருந்தன. நிகர ரன் விகித அடிப்படையில் ஆர்சிபி அணி முதலிடத்தை பிடித்திருந்தது. ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளுமே இந்த சீசனில் மிகவும் நிறைவான அணிகளாகத் திகழ்கின்றன. கேப்டன் ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி அதிரடியான பேட்டிங் மற்றும் கடந்த சீசன்களைக் காட்டிலும் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த பந்துவீச்சுப் படை ஆகியவற்றைக் கொண்டே கட்டமைத்துள்ளது. நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, இந்த சீசனில் 8 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தியுள்ளது. தொடக்க வீரராக களம் இறங்கும் ஜாம்பவான் விராட் கோலியின் அபார அனுபவமும், பந்துவீச்சில் ஜோஷ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் ஆகியோரின் வேகப்பந்து வீச்சு கூட்டணியின் பங்களிப்பும் அந்த அணிக்கு மிகப்பெரிய அளவில் பலன் அளித்துள்ளன. பேட்டிங்கில் தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார், வெங்கடேஷ் ஐயர், டிம் டேவிட், கிருணல் பாண்டியா ஆகியோரும் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். தங்கள் சொந்த மைதானம் அல்லாத பிற மைதானங்களிலும் வெற்றி பெறும் திறன் மற்றும் நூலிழையில் நகரும் பரபரப்பான போட்டிகளை வெற்றிகரமாக முடிக்கும் சாமர்த்தியம் ஆகியவை, லீக் சுற்றில் மிகவும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிறந்த அணிகளில் ஒன்றாக ஆர்சிபியை மாற்றின. அதுமட்டுமின்றி, தரம்சாலா மைதானத்தின் சுழல் மற்றும் வேகம் குறித்த நிலவரத்தை அறிந்திருப்பது ஆர்சிபிக்கு கூடுதல் சாதகமாக உள்ளது. ஏனெனில், இதே மைதானத்தில் கடந்த 17-ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி அணி வெற்றி கண்டிருந்தது. மறுபுறம் குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களின் அச்சுறுத்தக்கூடிய பந்துவீச்சுப் படை மற்றும் எதிரணியின் அழுத்தத்தை தங்களுக்குள் துளியும் புகவிடாத டாப்-ஆர்டர் பேட்டிங் வரிசையின் பலத்தால் பிளே-ஆஃப் சுற்றுக்குள் கம்பீரமாக நுழைந்துள்ளது. கேப்டன் ஷுப்மன் கில், திறம்பட விளையாடும் சாய் சுதர்சன், அதிரடி விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர் ஆகியோர் அணிக்குத் தேவையான ஸ்திரத்தன்மையையும் அதே நேரத்தில் அதிரடி ஆட்டத்தையும் சரிசமமாக வழங்கி வருகின்றனர்.





















