
புதுடெல்லி, மே 29- ஈரானின் ஜாஸ்க் துறைமுகம் அருகே கடந்த ஆண்டு ஜூலை மாதம் எம்.வி.ஹார்பர் பீனிக்ஸ் என்ற எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை தடுத்து நிறுத்தியது. இதையடுத்து அதில் இருந்த இந்திய மாலுமிகள் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தொடர்ச்சியான தூதரக முயற்சிகள் காரணமாக இந்திய மாலுமிகள் 10 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஈரானால் விடுவிக்கப்பட்ட இந்திய மாலுமிகள் தற்போது பத்திரமாக உள்ளனர். அவர்கள் மிக விரைவில் இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா- ஈரான் இடையே தூதரக மற்றும் எரிசக்தி உறவுகள் நீண்ட காலமாக உள்ளன, அதே வேளையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான தனது நெருங்கிய உறவுகளையும் இந்தியா சமநிலையில் கையாண்டு வருகிறது. வளைகுடா பகுதியில் சட்டவிரோதமாக எரிபொருளைக் கடத்தும் கப்பல்களை தடுத்து நிறுத்தி வருவதாக ஈரான் படைகள் அறிவித்து வருகிறது. இந்திய மாலுமிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையில் அமைதியான தூதரக அணுகுமுறை மற்றும் பொதுக் கருத்துகளை மிகக் குறைந்த அளவில் மட்டுமே தெரிவிக்கும் கொள்கையை இந்தியா பின்பற்றியது. இந்திய மாலுமிகள் கைது செய்யப்பட்டதற்கான காரணம் அல்லது அந்த எண்ணெய் கப்பல் குறித்து கூடுதல் விவரம் எதுவும் வழங்கப்படவில்லை. கப்பல் போக்குவரத்தை கண்காணிக்கும் இணைய தளங்கள், இந்த கப்பலை பலாவு நாட்டு கப்பல் என்று பட்டியலிட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய வர்த்தக கப்பல் பணியாளர்களை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். வளைகுடா கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஆயிரக்கணக்கான இந்திய மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர்.



















