
சென்னை: ஜூன் 2 –
தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தகர் அணி செயலாளர் மகேந்திரன் தற்கொலையை சுட்டிக்காட்டி, “தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களை இனியும் மனவேதனை அடையவிடாதீர்கள். வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்” என அதிமுக ஐடி விங் மாநிலச் செயலாளர் ராஜ் சத்யன் போட்ட பதிவு அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.
தனது பதிவில், அதிமுக இரண்டுபட்டு நிற்க காரணமானவர்களையும் சாடி இருந்த ராஜ் சத்யன், என்ன காரணத்தினாலோ சில மணி நேரத்திலேயே தனது பதிவை நீக்கிவிட்டார். இதுகுறித்து அவரை நாம் தொடர்பு கொண்டபோது, “கட்சி மீண்டும் செல்வாக்கான நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக அந்தப் பதிவை போட்டேன். மற்றபடி யார் மீதும் பழிசொல்வது நோக்கமில்லை” என்று முடித்துக் கொண்டார்.
இது விஷயமாக நம்மிடம் பேசிய ஐடி விங் பொறுப்பாளர்களோ, “ஜெயலலிதா காலத்தில் யாரும் தனிக்காட்டு ராஜாவாக ஆட்டம்போட முடியாது. அப்படி ஆட்டம் போட்ட சிலரை அட்ரஸே இல்லாமல் செய்தவர் ஜெயலலிதா.
ஆனால், இப்போது அப்படி இல்லை. பழனிசாமி கட்சிக்கு விசுவாசமான அனைவரையும் அரவணைத்து கட்சியை கொண்டு செலுத்த நினைக்கிறார். ஆனால், மாவட்ட பொறுப்பாளர்களில் பெரும்பகுதியினர் குறுநில மன்னர்கள் போல் செயல்படுகிறார்கள். அதனால் கட்சிக்குள் புதியவர்களின் வருகையே கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது. முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், வேலுமணி, விஜயபாஸ்கர் போன்றவர்கள் எல்லாம் 20 வயதில் கட்சிக்குள் வந்தவர்கள். ஆனால், இன்றைக்கு அப்படி யார் வருகிறார்கள்? இளைஞர் களுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட இளைஞர் – இளம்பெண்கள் பாசறையிலேயே ஐம்பது வயதைக் கடந்தவர்கள் தான் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
புதிதாக தொடங்கப்பட்ட விளையாட்டு அணிக்கு மாநிலச் செயலாளரே இல்லை. கட்சியில் இருக்கும் 82 மாவட்டச் செயலாளர்களில் 10 பேர் கூட இளைஞர்கள் இருக்க மாட்டார்கள். தற்சமயம் கட்சியில் 20 சதவீதம் பேர் இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பொறுப்புகளைக் கொடுத்து செயல்படவிட்டால் தான் அவர்கள் இன்னும் 20 சதவீதம் இளம் சகாக்களை உள்ளே கொண்டு வருவார்கள்.


















