
மும்பை: ஜூன் 2 –
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவுடன் தீவிரவாத சதி திட்டங்களில் ஈடுபட்ட சிலரை டெல்லி போலீஸார் கைது செய்து அவர்களது சதியை முறியடித்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
துரந்தர் என்ற இந்திப் படம் சமீபத்தில் வெளியாகி வசூலை குவித்தது. இந்த திரைப்படத்தில் படே சாப்பாக வரும் கதாபாத்திரம் மும்பை தாதா தாவூத் இப்ராகிம் மரண படுக்கையில் இருப்பது போல் காட்டுகிறது. இது தாவூத் கும்பலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. தாவூத் இப்ராகிம் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதை மும்பை மக்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அதனால் தங்கள் இயக்கத்துக்கு மும்பையில் இருந்து ஆட்களை சேர்க்கும் நடவடிக்கையில் தாவூத் கும்பல் ஈடுபட்டது. அவர்களுக்கு பயிற்சி மற்றும் ஆயுதங்கள் வழங்கும் பொறுப்பு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ.,யிடம் ஒப்படைக்கப்பட்டது. தீவிரவாத சதிகளை நிறைவேற்றும் பொறுப்பு துப்பாக்கி சுடுவதில் கில்லாடியான முன்னா ஜிங்காதா என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மும்பையில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களிடம், தங்கள் சதி திட்டத்திற்கான உண்மையான காரணம் தெரிவிக்கப்படவில்லை. மும்பை பாந்ரா பகுதியில் உள்ள கரீப் நகரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி ஒன்று புல்டோசர் மூலம் இடிக்கப்பட்ட சம்பவத்துக்கு பழிவாங்குவதற்காக தீவிரவாத சதி திட்டம் வகுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கும்பலின் சதி திட்டங்களை டெல்லி போலீஸார் முறியடித்து, தீவிரவாத சதி திட்டங்களின் பின்னணியில் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ மற்றும் தாவூத் கும்பல் இடையேயான தொடர்பை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.


















