Home மாவட்டங்கள் பெங்களூர் வங்கதேசத்தை சேர்ந்த அவருக்கு போலி ஆதார் கார்டு – கர்நாடக ஐகோர்ட் சரமாரி கேள்வி

வங்கதேசத்தை சேர்ந்த அவருக்கு போலி ஆதார் கார்டு – கர்நாடக ஐகோர்ட் சரமாரி கேள்வி

பெங்களூரு: ஜூன் 2 –
வங்காளதேசத்தைச் சேர்ந்த சட்டவிரோத ஊடுருவல்காரர்களுக்கு, போலியான ஆதார் மற்றும் பான் கார்டுகளைத் தயாரித்துக் கொடுத்ததாக போட்டோகிராபி கடை உரிமையாளர் அர்னாப் மண்டல் என்பவர் கைது செய்யப்பட்டார். தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அவர் கர்நாடக ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நாகபிரசன்னா, வழக்கை ரத்து செய்ய அதிரடியாக மறுத்துவிட்டார். மேலும், ஜாமீனுக்காக சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தை அணுகும்படி கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் ஆஜரான வக்கீல், “மனுதாரர் எந்தக் குற்றமும் செய்யவில்லை, அவரை கைது செய்ததற்கான காரணமும் சரியாகத் தெரிவிக்கப்படவில்லை” என்று வாதிட்டார்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த நீதிபதி, வக்கீலைப் பார்த்து ஆவேசமாக கேள்வி எழுப்பினார். நீதிபதி கூறியதாவது: இந்த வழக்கில் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்தவர்களுக்கு போலி ஆதார் கார்டு கொடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கட்டமைப்புக்கும் மனுதாரர் வேட்டு வைத்துள்ளார். நாட்டு நலனுக்கு எதிராகச் செயல்பட்ட இவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?”
நீதிபதி தனது கண்டனத்தைத் தொடர்ந்து காரசாரமாகக் கேள்விகளாகத் தொடுத்தார்:
இன்னும் எத்தனை ஆதார் கார்டுகளைத் தயாரிப்பீர்கள்? எவ்வளவு பேரை இந்தியாவிற்குள் நுழைய அனுமதிப்பீர்கள்?”
யார் யாரோ வந்து இங்கு ஆதார் கார்டு வாங்குகிறார்கள். ஏன்? மனுதாரர் போன்ற நபர்களால்தான் இது நடக்கிறது. நாட்டின் பாதுகாப்பு குறித்து துளியாவது கவலை வேண்டாமா?” தன் வீட்டு வாசலுக்கு வரும் வெளிநாட்டினருக்கெல்லாம் மனுதாரர் போலி ஆதார் கார்டு செய்து கொடுப்பாரா? வெளிநாட்டினருக்கு இவ்வளவு எளிதாக ஆதார் கார்டு கிடைக்கும் இந்த நிலையைப் பார்த்தால், நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்றே புரியவில்லை!” என்று ஐகோர்ட் கடும் கவலை தெரிவித்தது.
மனுதாரர் தரப்பில், அவர் கடந்த 2024 பிப்ரவரி 21 முதல் சிறையில் இருப்பதாகவும், சட்டப்படி அவருக்கான தண்டனைக் காலத்தில் பாதியை ஏற்கனவே சிறையில் கழித்துவிட்டதாகவும் வாதிடப்பட்டது.
ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிபதி, “மனுதாரர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது முற்றிலும் சரியே. இதில் ஐகோர்ட் தலையிடாது. போலி ஆதார் கார்டு கொடுத்து வெளிநாட்டினருக்கும் நம் நாட்டில் உரிமைகளை உருவாக்கிக் கொடுக்கிறீர்கள். முதலில் நாடுதான் முக்கியம். மனுதாரர் இந்தியர் இல்லையா?” என்று சாட்டையடி கேள்வி எழுப்பினார்.
இறுதியாக, வழக்கை ரத்து செய்யக் கோரும் மனுவை வாபஸ் பெற அனுமதித்த ஐகோர்ட், ஜாமீன் தேவைப்பட்டால் விசாரணை நீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறி மனுவை அதிரடியாகத் தள்ளுபடி செய்தது.