
சென்னை: ஜூன் 2 –
திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற இரு மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் 3 உதயசூரியன் சின்னத்திலும் ஒரு தொகுதியில் மதிமுகவின் தனி சின்னத்திலும் போட்டியிட்டது.
இந்த நிலையில் சீர்காழி செந்தில் செல்வன், கடையநல்லூர் டி.எம்.ராஜேந்திரன், மொடக்குறிச்சியில் செந்தில் நாதனும் மதுரை தெற்கில் பூமிநாதனும் போட்டியிட்டனர். இவர்களில் சீர்காழி, கடையநல்லூரில் மட்டும் உதயசூரியனில் போட்டியிட்ட மதிமுகவினர் வென்றுள்ளனர். கடையநல்லூரில் மதிமுகவின் டி.எம். ராஜேந்திரன், அதிமுகவின் கிருஷ்ணாமுரளியை 6,253 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். ஆனால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு ஜெயித்ததால், அந்த இரு எம்எல்ஏக்களும் – சீர்காழி செந்தில் செல்வன் மற்றும் கடையநல்லூர் ராஜேந்திரன் – சட்டப்படி திமுக கட்சி சார்பான எம்எல்ஏக்களாக கணக்கில் கொள்ளப்படுவர். இதனால் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கவும் முடியாத, திமுகவை விட்டு நடமாடவும் முடியாத அவலநிலையில் சிக்கியுள்ளனர்.
இந்தச் சிக்கல்களை கட்சியின் நலனுக்காக தீர்க்க, சீர்காழி செந்தில் செல்வன் மற்றும் கடையநல்லூர் ராஜேந்திரன் இருவரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதிமுகவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, திமுக கூட்டணியிலிருந்து வெளியேறியே ஆக வேண்டும் என கட்சி நிர்வாகிகள் பொதுச் செயலாளர் வைகோவிடம் தீவிரமாக அழுத்தம் கொடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக முதல்வர் விஜய் நேரில் வந்தார். திருச்சி விமான நிலையத்தில் மதிமுக எம்பி துரை வைகோ அவரை வரவேற்றார். சால்வை அணிவித்து வரவேற்ற துரை வைகோ, அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ரமேஷ், துணை சபாநாயகர் உள்ளிட்டோரும் கூட இருந்தனர். வரவேற்பு முடிந்த பின் முதல்வர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு சென்றார்.
அந்த சந்திப்புக்கு பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், “துரதிருஷ்டவசமாக திமுக சின்னத்தில் போட்டியிட்டோம். இனி நாங்கல் தனி இயக்கம். உதயசூரியன் சின்னத்தில் நின்றதால் எங்களால் தவெகவுக்கு ஆதரவு தர முடியவில்லை. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் இடதுசாரி போன்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்திருந்தன. இதில் எந்த தவறும் இல்லை. தமிழ்நாடு மக்கள் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை அளிக்காவிட்டாலும் த.வெ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதை ‘மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்பதற்கு இணங்க நாம் மதிக்க வேண்டும். இந்த அரசு சிறப்பாகச் செயல்படும் என்ற நம்பிக்கையுடன் அதற்கு ஓராண்டு வரை கால அவகாசம் அளிக்க வேண்டும். அரசு ஏதேனும் தவறிழைக்கும் பட்சத்தில், கூட்டணியில் இருக்கும் கட்சிகளோ அல்லது எங்களைப் போன்ற வெளியில் இருக்கும் இயக்கங்களோ தாராளமாகக் கண்டனங்களையும் கருத்துக்களையும் பதிவு செய்யலாம் என அவர் தெரிவித்தார். ஜூன் 27-ம் தேதி மதிமுக பொதுக்குழு கூட்டப்படுகிறது. அந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் தொடர வேண்டுமா என்பது நிர்வாகிகளிடம் கேட்கப்பட்டு, அவர்களின் மனநிலைப்படி முடிவு எடுக்கப்படும். துரை வைகோ தனது வழக்கமான அரசியல் சாமர்த்தியத்துடன் சொன்னார்: “இது என்னாலோ, வைகோவாலோ தனிப்பட்ட முறையில் எடுக்கக்கூடிய முடிவல்ல. மதிமுக ஒரு ஜனநாயகக் கட்சி.” என்றும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.


















