
கொல்கத்தா: ஜூன் 4-
மேற்கு வங்க அரசு பெண்களுக்கான புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘அன்னபூர்ணா பண்டார்’ என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள அன்னபூர்ணா யோஜனா 2026 திட்டத்தை முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ஹவுராவில் உள்ள மாநில தலைமைச் செயலகம் ‘நபன்னா’வில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ₹3,000 நிதியுதவி நேரடியாக வங்கிக் கணக்கில் வழங்கப்படும். தொடக்க விழாவில் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அக்னிமித்ரா பால் ஆகியோர் ஐந்து பெண் பயனாளிகளுக்கு நிதியுதவிக் காசோலைகளை நேரில் வழங்கினர். விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, முதற்கட்டமாக 28,25,769 பெண்கள் இத்திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். அனைவருக்கும் மாதந்தோறும் ₹3,000 நிதி நேரடியாக வழங்கப்படும் என்றார். இன்னும் தகுதியான பெண்கள் பதிவு செய்ய அடுத்த 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் முழுமையான உதவி வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். அன்னபூர்ணா பண்டார் திட்டத்தில் பயன்பெற 25 முதல் 60 வயது வரையிலான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இது பாரதிய ஜனதா கட்சியின் (BJP) முக்கிய தேர்தல் வாக்குறுதியாகும். முந்தைய ‘லக்ஷ்மிர் பண்டார்’ திட்டத்தில் வழங்கப்பட்ட ₹1,500 உதவியை இரட்டிப்பாக்கி ₹3,000 ஆக வழங்குவோம் என்ற வாக்குறுதியை ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நிறைவேற்றியுள்ளனர்.


















