Home செய்திகள் உலக செய்திகள் தாக்குதலை தொடரும் அமெரிக்கா; ஈரான் பயணத்தை ஒத்திவைக்க இந்தியா அறிவுறுத்தல்

தாக்குதலை தொடரும் அமெரிக்கா; ஈரான் பயணத்தை ஒத்திவைக்க இந்தியா அறிவுறுத்தல்

ஈரான் ஜூலை 20 –
ஈரான் பயணத்தை ஒத்திவைக்குமாறு அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. தற்போது வசிக்கும் இந்தியர்கள் கிடைக்கும் விமானங்களை பயன்படுத்தி ஈரானை விட்டு வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரானுடன் போரை முடிவுக்கு கொண்டு வர முயன்ற இடைக்கால அமைதி ஒப்பந்தம் முறிந்த நிலையில், அமெரிக்கா -ஈரான் இடையே மீண்டும் மோதல் முற்றி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கடந்த ஒரு வாரமாக இரு தரப்பும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
நேற்று இரவும் அமெரிக்கப் படையினர் ஈரானில் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். ஹார்முஸ் ஜலசந்தியில், வர்த்தகக் கப்பல்கள், மாலுமிகளைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஈரான் ராணுவத் திறன்களைச் சீர்குலைப்பதற்கே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கப்படை மத்திய தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அங்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ள இந்தியர்களுக்கு முக்கிய அறிவுரை வழங்கி உள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சமீப காலங்களில் ஈரானில் மோதல்கள் அதிகரித்துள்ளன. இச்சூழலைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு நோக்கத்திற்காகவும் ஈரானுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள இந்தியர்கள், பாதுகாப்புச் சூழல் சீரடையும் வரை தங்கள் பயணத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும்.
ஏற்கனவே ஈரானில் உள்ள இந்தியர்கள், கிடைக்கக்கூடிய விமானச் சேவைகளைப் பயன்படுத்தி அங்கிருந்து தற்காலிகமாக வெளியேறுவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். ஈரானிலேயே தங்கியிருக்க முடிவு செய்யும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

நிலவரம் குறித்த முழுமையான விழிப்புணர்வுடன் இருக்கச் செய்திகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும்; நாட்டின் தெற்கு கடற்கரைப் பகுதிகள் போன்ற அதிக ராணுவ நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைக் கவனமாகப் பின்பற்ற வேண்டும். ஈரானில் உள்ள இந்தியர்கள் எவரேனும் இதுவரை தூதரகத்தில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்யவில்லை என்றால், அவர்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும்; மேலும், கூடுதல் தகவல்களுக்குத் தூதரகத்தின் இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஈரானில் உள்ள இந்தியத் தூதரகத்தை அவசர தேவைக்கு +989128109115; +989128109102; +989128109109; +989932179359 என்ற எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.