
சென்னை: ஜூன் 16-
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு எதிராக திமுக தனது தாக்குதலைக் கடுமையாகத் தீவிரப்படுத்தியுள்ளது.
தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு, நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழக’ (தவேக) அரசில் கூட்டணிக் கட்சியாகப் பங்கேற்றது. இந்த அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தேசிய அளவிலும், மாநில அளவிலும் மோதல் வெடித்துள்ளது.
இதுகுறித்து திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “காங்கிரஸ் கட்சி தனது அரசியல் வாழ்விற்காகப் போராடிக் கொண்டிருந்தபோது, அவர்களை எங்கள் தோள்களில் சுமந்தோம். ஆனால், புதிய பளபளப்பான பொம்மையைப் (தவெக) பார்த்த உடனே அவர்கள் கூட்டணியை விட்டுத் குதித்துவிட்டார்கள். ராகுல் காந்தி ஒரு மிகப்பெரிய ஜோக்” என்று மிகக் காட்டமாக விமர்சித்துள்ளது.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘முரசொலி’யில் வெளிவந்துள்ள தலையங்கத்தில், ராகுல் காந்தியின் அரசியல் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன.
கூட்டணி ஒற்றுமையைப் பற்றி ராகுல் காந்தி பாடம் எடுக்கிறார். ஆனால், பல்வேறு மாநிலங்களில் அந்த ஒற்றுமையைக் குலைத்தது யார்? கேரளா தேர்தல் பிரச்சாரத்தின்போது, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். இடதுசாரி அரசுக்கும், பாஜகவுக்கும் ரகசிய உடன்பாடு இருப்பதாகக் குற்றம் சாட்டினார். இதன் மூலம், பாஜகவை எதிர்ப்பதை விடத் தனது கூட்டணிக் கட்சிகளையே வீழ்த்துவதில் காங்கிரஸ் ஆர்வம் காட்டுவதாக இடதுசாரி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்” என்று முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது.
மத்தியில் இந்தியா கூட்டணிக் கூட்டத்தை திமுக அண்மையில் புறக்கணித்திருந்த நிலையில், தற்போது ராகுல் காந்தியை “அரசியல் முதிர்ச்சியற்றவர்” என்று திமுக நேரடியாகச் சாடியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் திமுக கூட்டணி நீண்ட பல ஆண்டுகளாக நீடித்து வந்தது
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கூட இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன ஆனால் இரு கட்சிகளுக்கும் பனிப்போர் நிலவியது தமிழகத்திற்கு பிரச்சாரம் செய்ய வந்த ராகுல் காந்தி திமுக மேடையில் ஏறவில்லை திமுகவை ஆதரித்து பிரச்சாரமும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காங்கிரஸ் விஜய் அவர்களின் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணி அமைத்து மந்திரி சபையிலும் சேர்ந்து விட்டது இது திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது


















