
துபாய், ஜூன் 22- ஐக்கிய அமீரகத்தில் இப்போது வெப்பம் உச்சக்கட்டத்தில் இருக்கிறது. எல் நினோ நிகழ்வு காரணமாக அமீரகத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் உச்சத்தில் இருக்கிறது. நீச்சல் குளமே சூடாகி, குளிக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. இதனால் அமீரக மக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகிறார்கள். ஐக்கிய அமீரகத்தில் கோடைக் காலம் அதன் உக்கிரத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை, ஜூன் 20ம் தேதி அங்கு வெப்பநிலை கிட்டத்தட்ட 50 டிகிரி செல்சியஸை நெருங்கி மக்களை நிலைகுலையச் செய்தது. 50 டிகிரி செல்சியஸ் என்பது 122 டிகிரி பாரன்ஹீட் வெப்பமாகும்.வெப்பம் உச்சம் அல் அய்ன் பகுதியில் உள்ள சுவைஹான் (Sweihan) என்ற இடத்தில் அதிகபட்சமாக 49.4 டிகிரி செல்சிஸ் வெப்பநிலை பதிவானதாக அந்நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் மதியம் 12.45 மணியளவில் இந்த உச்சக்கட்ட வெப்பம் பதிவாகியுள்ளது. அன்றைய தினம் அமீரகத்தில் பதிவான அதிகபட்ச வெப்பம் இதுவாகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்த வெப்பநிலையுடன் ஒப்பிடும்போது, தற்போது அங்கு வெப்பம் தாறுமாறாக அதிகரித்துள்ளது. உதாரணமாகக் கடந்த ஏப்ரல் 21ம் தேதி அல் தஃப்ரா பிராந்தியத்தில் உள்ள ஒவைத்தைடில் (Owtaid) என்ற இடத்தில் 42.9 டிகிரி செல்சிஸ் மட்டுமே பதிவாகியிருந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஏப்ரல் 15ம் தேதி அல் அய்னின் உம் அசிமுல் பகுதியில் வெறும் 35 டிகிரி செல்சிஸ் வெப்பநிலையே நிலவியது. ஆனால், இப்போது வெறும் இரண்டு மாத இடைவெளியில் வெப்பநிலை இவ்வளவு வேகமாக உயர்ந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.



















