
ஹைதராபாத், ஜூன் 22- தெலுங்கானா அரசு அதிகாரியின் வீட்டில் 150 கோடி சொத்துக்கள் சிக்கிய வழக்கில், இப்போது அடுத்த அதிர்ச்சியாக அவரது மனைவியின் லாக்கர் உடைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய இந்த அதிரடி சோதனையில், கிலோ கணக்கில் தங்க பிஸ்கட்டுகளும் கோடிக்கணக்கான பணமும் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் என்னென்ன ஆச்சரியங்கள் வெளிவரப் போகிறதோ என்று தெலுங்கானா அரசு வட்டாரமே தற்போது உறைந்து போய் கிடக்கிறது. என்ன நடந்தது? தெலுங்கானா மாநிலத்தில் நில அளவை மற்றும் நில ஆவணங்கள் துறையின் துணை இயக்குனராகப் பணியாற்றி வந்தவர் நரஹரி ராவ்.. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் கடந்த ஜூன் 16ம் தேதி கைது செய்யப்பட்டார். விசாரணையும் நடந்தது. ஹைதராபாத் அரசு அதிகாரி அப்போது ஹைதராபாத் சாலி பண்டா பகுதியில் உள்ள ஒரு வங்கியில் அவரது மனைவியின் பெயரில் 2 சீக்ரெட் லாக்கர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த லாக்கர்களை நேற்று முன்தினம் திறந்து அதிகாரிகள் சோதனையிட்ட போது, அதில் மேலும் 2 கிலோ தங்கம் மற்றும் ரூ.1.50 கோடி ரொக்கப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் பின்னணி குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, அரசு அதிகாரியான நரஹரி ராவ் தனது பதவியை தவறாக பயன்படுத்தி கோடிக்கணக்கில் ஊழல் செய்ததாக புகார்கள் கிளம்பின. 12 தங்க பிஸ்கட்டுகள் இந்த புகார்களின் அடிப்படையில் கடந்த வாரம் அவரது வீட்டில் நடத்தப்பட்ட முதல் கட்ட சோதனையிலேயே, கணக்கில் வராத ரூ.1.54 கோடி ரொக்கப் பணம், 1.3 கிலோ தங்கம், 8 கிலோ வெள்ளி, ஹைதராபாத்தின் முக்கிய இடங்களில் ரூ.150 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த அதிரடி சோதனைகளை தொடர்ந்து நரஹரி ராவ் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.



















