
சென்னை: ஜூன் 22-
முதல்வர் விஜய் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அது போல் மகிழ்ச்சியோடு வாழ முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய்யின் 52 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று இரவு 12 மணி முதலே தவெகவினரும் ரசிகர்களும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினர்.
அது போல் சிவகாசியில் ஒரு மணி நேரம் இடைவிடாமல் வாணவேடிக்கையை விட்டு அமைச்சர் கீர்த்தனாவும், நடிகர் ஜெய்யும் விஜய் பிறந்தநாளை கொண்டாடினர். முதல்வர் பிறந்தநாளையொட்டி நேற்றும் இன்றும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் அனுமதி இலவசம் என அறிவிக்கப்படுகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூங்காவை கண்டு மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் ரத்த தான முகாம், நலத்திட்ட முகாம் என தவெக நிர்வாகிகளும் அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் விஜய் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள்.
அந்த வகையில் விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள், அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியமான உடல்நிலையுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியில், “மாண்புமிகு முதல்வர் ச.ஜோசப் விஜய்க்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்! தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் – உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன். இவ்வாறு அந்த வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது ட்வீட்டில், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் விஜய், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


















