Home மாவட்டங்கள் பெங்களூர் பிஜி விடுதி உரிமையாளர் அடித்துக் கொலை: 2 கல்லூரி மாணவர்கள் கைது

பிஜி விடுதி உரிமையாளர் அடித்துக் கொலை: 2 கல்லூரி மாணவர்கள் கைது

பெங்களூரு: ஜூன் 23-
குழாய் தண்ணீரைப் பயன்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், பிஜி உரிமையாளரை இரண்டு கல்லூரி மாணவர்கள் பேட்டால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பெங்களூரு ராமமூர்த்தி நகர் கஸ்தூரி நகர் முக்கிய சாலையில் ‘லக்ஷ்மி நரசிம்மா’ என்ற பிஜி விடுதி இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் மாதவ் மெட் (37).
இந்த விடுதியில் தங்கியிருக்கும் பிகாம் இறுதி ஆண்டு மாணவர் ராகேஷ் (21), பிபிஏ முதலாமாண்டு மாணவர் டான் பிரைட் சன் (20) ஆகிய இருவரும் குழாயில் தண்ணீரைத் திறந்துவிட்டு கால்களைக் கழுவிக் கொண்டிருந்தனர். தண்ணீரை வீணாக்கக் கூடாது என உரிமையாளர் மாதவ் அவர்களை எச்சரித்துள்ளார்.
இதனால் இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. ஆத்திரமடைந்த மாதவ், மாணவர்களை அடிக்க பேட்டை எடுத்து வந்துள்ளார். ஆனால், மாணவர்கள் அவரிடமிருந்து பேட்டைப் பறித்து, மாதவை சரமாரியாகத் திருப்பித் தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த மாதவ், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ராமமூர்த்தி நகர் போலீசார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த மாணவர்கள் ராகேஷ் மற்றும் டான் பிரைட் சன் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இதுகுறித்து மேல் விசாரணை நடந்து வருவதாக டிசிபி டாக்டர் விக்ரம் அம்தே தெரிவித்துள்ளார்.