Home மாவட்டங்கள் பெங்களூர் காதலனுடன் சேர்ந்து தாய், தந்தை, தங்கையை கொன்ற மகள்

காதலனுடன் சேர்ந்து தாய், தந்தை, தங்கையை கொன்ற மகள்

பெங்களூரு: ஜூன் 23-
காதலனுடன் சேர்ந்து வாழ எதிர்ப்பு தெரிவித்ததால், பெற்றெடுத்த தாய், தந்தை மற்றும் உடன்பிறந்த தங்கையை மூத்த மகளே காதலனுடன் சேர்ந்து கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
பெங்களூரு கே.ஆர்.புரம் சிகேஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தர் (55). இவரது மனைவி முத்துலட்சுமி (48). இவர்களது இளைய மகள் சுப்ரியா (20). சோமசுந்தரின் மூத்த மகள் ஸ்வேதா.
ஸ்வேதா, கெனத் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்ளாமல் அவனுடன் ‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ முறையில் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். மகளின் இந்த ஒழுக்கமற்ற நடத்தைக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
மகளுக்கு புத்திமதி கூறி, அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக சோமசுந்தர், தன் மனைவி மற்றும் இளைய மகளுடன் சிகேஹள்ளியில் உள்ள ‘சாய் கிரீன் அபார்ட்மெண்ட்’ குடியிருப்புக்குச் சென்றார். அங்கு ஸ்வேதா மற்றும் அவளது காதலன் கெனத்திடம் பெற்றோர் பேசியபோது இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது.
வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த காதல் ஜோடி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெற்றோர் என்றும் பாராமல் சோமசுந்தர், முத்துலட்சுமி மற்றும் தங்கை சுப்ரியாவை சரமாரியாகக் குத்தினர். இதில் பலத்த குத்துக்காயமடைந்த முத்துலட்சுமியும், சுப்ரியாவும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
மனைவியும், சின்ன மகளும் கண் முன்னே பிணமாக விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை சோமசுந்தர், பலத்த காயங்களுடன் அலறியபடி எப்படியோ தப்பித்து வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தார். அபார்ட்மெண்ட் படிக்கட்டில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீசார், உயிருக்கு போராடிய சோமசுந்தரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இறப்பதற்கு முன் அவர் போலீசாரிடம் கண்ணீருடன் அளித்த மரண வாக்குமூலத்தில்:
என் மூத்த மகள் ஸ்வேதா காதலனுடன் தனியாக வாழ்ந்து வந்தாள். அது சரியல்ல என்று புத்திமதி சொல்லத்தான் வந்தோம். ஆனால் அவளும், அவளது காதலனும் எங்களை கத்தியால் குத்தினார்கள். என் மனைவியும், சின்ன மகளும் உள்ளேயே கிடக்கிறார்கள். என்று கூறி கதறியபடியே உயிரை விட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த கே.ஆர்.புரம் போலீசார் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோரைக் கொன்றுவிட்டு தப்பியோடிய கல்நெஞ்சம் படைத்த மகள் ஸ்வேதா மற்றும் அவளது காதலன் கெனத்தை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.