
கொல்கத்தா: ஜூன் 26-
கொல்கத்தா தரதலா பகுதியில் பிரேஸ் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே சேமிப்பு கிடங்கு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
மேற்கு வங்கம் கொல்கத்தாவில் தரதலா பகுதியில் பிரேஸ் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே கட்டப்பட்டு வந்த 3 அடுக்கு சேமிப்பு கிடங்கு நேற்று முன்தினம் இடிந்து தரைமட்டமானது. இந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. நேற்று காலை 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டதால், மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இடிபாடுகளில் வேறு யாரும் சிக்கியுள்ளனரா என்பதை கண்டறியும் ராணுவத்தின் ஜிபிஆர் ரேடார் உதவியுடன் தேடும் பணி நடைபெறுகிறது. இது கான்கிரீட் இடிபாடுகளுக்கு உள்ளும் மனிதர்களின் நடமாட்டம், நாடித் துடிப்பு ஆகியவற்றை கண்டறியும். இடிபாடுகளுக்குள் கேமராக்களை நுழைத்து தேடும் பணி நடைபெறுகிறது.
செல்போன் டவர் தரவுகள் மூலமாகவும், இடிபாடுகளுக்குள் யாருடைய செல்போனும் செயல்பாட்டு நிலையில் உள்ளதா என்பதும் கண்டறியப்படுகிறது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக கொல்கத்தா போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ரூ.2 லட்சம் நிவாரணம்: சேமிப்பு கிடங்கு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.50,000-ம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


















