
ஹாசன்: ஜூன் 26-
மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தால், காதலித்து திருமணம் செய்த மனைவியைக் கணவனே கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூர சம்பவம் பேலூர் தாலுகா ஹுல்லேனஹள்ளி கிராமத்தில் நடந்துள்ளது.
ஹுல்லேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த யசோதா (23) என்பவரே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர் ஆவார். கொலை செய்துவிட்டு தப்பியோடிய அவரது கணவர் புனீத் (28) என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு யசோதாவும் புனீத்தும் உயிருக்கு உயிராகக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். ஒரு சில ஆண்டுகள் இவர்களது குடும்ப வாழ்க்கை மிகவும் அன்யோன்யமாகச் சென்றது. ஆனால், சமீபகாலமாக மனைவி மீது புனீத்துக்குக் கடுமையான சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையே சாக்காக வைத்து தினமும் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். வேறு ஆண்களுடன் மொபைல் போனில் பேசக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.
கணவனின் சந்தேகப் பேச்சாலும், சித்திரவதையாலும் மனமுடைந்த யசோதா, சமீபத்தில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்து பதறிய புனீத், அவரை உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, கணவனுடன் வாழப் பிடிக்காமல் யசோதா தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். புனீத் பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை. மாறாக, ஹாசனில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, தன் மகளைப் படிக்க வைத்துக்கொண்டு தனியாக வாழ்ந்து வந்தார்.
கடந்த ஜூன் 24-ம் தேதி மாலை, யசோதா தங்கியிருந்த வீட்டிற்குச் சென்ற புனீத், மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், “உன்னுடன் வர முடியாது” என்று யசோதா பிடிவாதமாகக் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிப் பலத்த மோதல் வெடித்தது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
ஆனால், ஆத்திரம் அடங்காத புனீத், அன்று இரவு தன் மனைவியைக் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளதாக யசோதாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து யசோதாவின் பெற்றோர் கூறுகையில், “எங்கள் மகள் இறந்த விஷயத்தைக் உறவினர் ஒருவர் கூறிக் கதறினார். உடனே பதறியடித்துக்கொண்டு ஓடிவந்து பார்த்தபோது, மகளின் உடல் வீட்டின் முன்னால் கிடத்தப்பட்டிருந்தது. கழுத்துப் பகுதியில் கயிறு இறுக்கிய வடு இருந்தது. அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது, புனீத் வந்து சண்டை போட்டதை உறுதிப்படுத்தினர்.
எங்கள் பேத்தியிடம் (யசோதாவின் மகள்) கேட்டபோது, ‘அப்பா, அம்மாவின் கழுத்தில் கயிறைப் போட்டார். அப்புறம் என்னை மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி கடைக்குக் கூட்டிட்டுப் போனார்’ என்று மழலை மாறாமல் கூறினாள். சந்தேகப் பேயால் புனீத்தே எங்கள் மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டான்” எனத் கண்ணீருடன் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில், ஹளேபீடு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த கணவர் புனீத்தைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


















