
பெங்களூரு: ஜூன் 26-
பிரபல கன்னட நடிகர் தர்ஷனின் மகன் வினீஷ் பயணம் செய்த கார், ஆர்.ஆர்.நகர் பகுதியில் இன்று சிறிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், “என் மகன் காரை ஓட்டவில்லை” என்று தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி அதிரடி விளக்கம் அளித்துள்ளார்.
ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த ஃபோர்டு எண்டெவர் காரும், ஒரு இருசக்கர வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. விபத்து நடந்த இடத்தில் நடிகர் தர்ஷனின் மகன் வினீஷுக்கும், அங்கிருந்த பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறி சில வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மேலும், வினீஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவர்தான் காரை ஓட்டினார் என்றும் செய்திகள் பரவின.
இந்த விவகாரம் குறித்து விஜயலட்சுமி தர்ஷன் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
வினீஷுக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது. அவர் நலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறார். விபத்து நடந்தபோது வினீஷ் காரை ஓட்டவில்லை, எங்களது குடும்ப ஓட்டுநர்தான் காரை ஓட்டினார். பெங்களூரு போக்குவரத்தில் இது போன்ற சிறிய விபத்துகள் சாதாரணமான ஒன்றுதான். இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள்தான் தவறு செய்ததாக ஒப்புக்கொண்டு சம்பவ இடத்திலேயே மன்னிப்புக் கேட்டனர். அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதைப் பார்க்கவே வினீஷ் காரில் இருந்து கீழே இறங்கினார். ஆனால், அந்த வீடியோ காட்சிகளைச் சிலர் தவறாகச் சித்தரித்து வதந்தியைப் பரப்பியுள்ளனர். ஏற்கனவே எங்கள் குடும்பம் ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டு வரும் வேளையில், இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகள் எங்களை மேலும் வேதனைக்குள்ளாக்குகின்றன. எனவே, ஊடகங்கள் உண்மையை ஆராய்ந்து செய்தி வெளியிட வேண்டும். பொதுமக்கள் யாரும் இதுபோன்ற வதந்திகளை நம்பவோ, பகிரவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு விஜயலட்சுமி தர்ஷன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.


















