
லக்னோ, ஜூன் 26-
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உலகப் புகழ்பெற்ற ராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து, தங்களது காணிக்கைகளை அள்ளி வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில், பக்தர்கள் உண்டியலில் போட்ட காணிக்கை பணத்தை ஒரு கும்பல் திட்டமிட்டு, ரகசியமாக கொள்ளையடித்து வந்த அதிர்ச்சி தகவல் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த பெரும் கொள்ளை விவகாரம் தொடர்பாக, ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராயின் மிக நெருங்கிய உதவியாளரான ராமசங்கர் யாதவ் என்ற ‘டின்னு யாதவ்’ மற்றும் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் சுபாஷ் ஸ்ரீவஸ்தவா, அனுகல்ப் மிஸ்ரா, லவ்குஷ் மிஸ்ரா, அவினாஷ் சுக்லா, மனிஷ் யாதவ், கருணேஷ் பாண்டே, ராமசங்கர் மிஸ்ரா ஆகிய 8 பேரை போலீசார் நேற்று நள்ளிரவில் அதிரடியாக கைது செய்தனர்.
கோவில் உண்டியலில் இருந்து பணத்தை திருடி, அவர்கள் ரகசியமாக வெளியே கடத்திய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகி இருந்தது. இந்த ஆதாரத்தை வைத்து, அறக்கட்டளை உறுப்பினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கைதான 8 பேரிடமும் தனி அறையில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், ராமர் கோவில் பணமே திருடப்பட்டிருப்பது அங்கு பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.
“பெரிய திமிங்கலங்களைக் காப்பாற்றவே இந்த நாடகம் ஆடப்படுகிறது” என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கொதித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன
இதற்கிடையே, உபி மாநில நிதியமைச்சர் சுரேஷ் கன்னா செய்தியாளர்களிடம் பேசுகையில், “இது யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி. தவறு செய்தவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தப்ப முடியாது. பக்தர்களின் காணிக்கைப் பணத்தில் கை வைத்தவர்களுக்கு கடுமையான தண்டனை நிச்சயம்” என்று எச்சரித்துள்ளார்.
தனது சொந்த ஆட்கள் மற்றும் உதவியாளர் டின்னு யாதவ் ஆகியோர் காணிக்கை திருட்டு வழக்கில் சிக்கியதால், ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய்க்கு நெருக்குதல் அதிகரித்துள்ளது. இதனால், அவர் தனது பதவியை விரைவில் ராஜினாமா செய்யக்கூடும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


















