
கொல்கத்தா, ஜூன் 27- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மற்றும் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சாப்பல் இடையேயான மோதல் உலகறிந்தது. 2005-06 காலகட்டத்தில் நடந்த அந்த கசப்பான சம்பவங்கள் கடந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், சாப்பல் மீதான தனது கோபத்தையும் வருத்தத்தையும் கங்குலி இன்னும் மறக்கவில்லை என்பதை தற்போதைய நேர்காணல் ஒன்று நிரூபித்துள்ளது. சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய கங்குலி, சாப்பல் குறித்து சில அதிரடி தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கக் கோரி உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டும் மனுவில் கையெழுத்திடுமாறு, கடந்த பிப்ரவரி மாதம் சாப்பல் தனக்கு மெசேஜ் அனுப்பியதாக கங்குலி கூறினார். ஆனால், அதற்கு தான் பதிலளிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கங்குலி கூறுகையில், “ஆமாம், அவர் எனக்கு மெசேஜ் அனுப்பினார். ஆனால் நான் அவருக்குப் பதில் சொல்லவில்லை. நேர்மையற்ற மனிதர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. உங்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்கலாம், ஆனால் அதை நேருக்கு நேர் சொல்ல வேண்டும். தவறான வழியில் பிரச்சினைகளைத் தீர்க்க நினைப்பவர்களை எனக்குப் பிடிக்காது” என்று பேசினார். மேலும், கடந்த 2011-ல் நடந்த மற்றொரு சுவாரசியமான சம்பவத்தையும் கங்குலி வெளிப்படுத்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக கங்குலி இருந்தபோது, சாப்பல் அவருக்கு ஒரு மெயில் அனுப்பியுள்ளார்.





















