
வாஷிங்டன்: ஜூன் 27-
ஈரான் போர் உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியில், உலகப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக இந்தியா தொடர்ந்து நீடித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) பாராட்டியுள்ளது.
சர்வதேச பொருளாதார மந்தநிலை மற்றும் உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகளின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. எனினும் நாட்டின் வலுவான உள்நாட்டுத் தேவை காரணமாக இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து மீள்திறனுடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், வாஷிங்டனில் நடைபெற்ற ஐஎம்எஃப் செய்தியாளர்கள் சந்திப்பில், அதன் செய்தித் தொடர்புத் துறை இயக்குநர் ஜூலி கோசாக் கூறியதாவது: ஈரான் போர்ச் சூழல் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் சவால்களுக்கு இடையிலும், இந்தியாவின் பொருளாதாரம் வலுவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
குறிப்பாக, இந்தியாவிற்குள் இருக்கும் வலுவான உள்நாட்டுத் நுகர்வுத் தேவை இதற்குப் பக்கபலமாக அமைந்துள்ளது. நடப்பு 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்ற எங்கள் கணிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 6.5 சதவீத வளர்ச்சி உலகப் பொருளாதாரச் சூழலில் மிகவும் வலுவான ஒன்று. இவ்வாறு ஜூலி கோசாக் தெரிவித்தார்.
வல்லரசு நாடுகளின் பொருளாதாரம் தடுமாற்றத்தைச் சந்தித்து வரும் வேளையில், போர் மற்றும் எரிசக்தி தட்டுப்பாடு போன்ற இக்கட்டான சூழல்களையும் திறம்பட எதிர்கொண்டு இந்தியா தனது பொருளாதார ஸ்திரத்தன்மையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம், உலகப் பொருளாதாரத்தை முன்னோக்கிச் செலுத்தும் ஒரு முதன்மை நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது உலக அரங்கில் அதன் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்துள்ளது.


















