
பெங்களூரு: ஜூன் 27-
பெங்களூரு குரூபரஹள்ளியில் உள்ள ஒரு தொழில்துறை ஷெட்டில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ.2.98 கோடி ரொக்கப் பணத்தைமகாலட்சுமி லேஅவுட் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த பரபரப்பான சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கடந்த ஜூன் 2-ஆம் தேதி மகாலட்சுமி லேஅவுட் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராகேஷ் மற்றும் போலீசார் குரூபரஹள்ளி 11-வது கிராஸ் பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ‘சேஷாத்ரி இண்டஸ்ட்ரீஸ்’ என்ற ஷெட்டில் பெருமளவில் சட்டவிரோத பணம் பதுக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் அந்த ஷெட்டிற்குள் அதிரடியாக புகுந்து சோதனையிட்டனர். அங்கு 4 பெரிய பைகளில் கட்டுக்கட்டாக நோட்டுகள் கொட்டிக்கிடந்தன. அவற்றை பறிமுதல் செய்து எண்ணிப்பார்த்தபோது, மொத்தம் ரூ.2.98 கோடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்தப் பணம் தாவரேகரே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. அவர் குரூபரஹள்ளியில் உள்ள தனது நண்பர் வெங்கடேஷ் என்பவருடைய ஷெட்டில் இந்த கோடிக்கணக்கான பணத்தை ரகசியமாக பதுக்கி வைத்துள்ளார்.
இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த போலீசார், நீதிமன்ற அனுமதியுடன் மகாலட்சுமி லேஅவுட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக நாகராஜ் மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, சித்ரதுர்காவில் உள்ள எங்களது சொத்தை விற்று இந்த பணத்தை கொண்டு வந்தோம். வங்கிக் கடனை அடைப்பதற்காக இதை வைத்திருந்தோம்”* என்று அவர்கள் கூறினர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்துவிட்டனர். இருப்பினும், பறிமுதல் செய்யப்பட்ட இவ்வளவு பெரிய தொகைக்கு எந்தவித முறையான ஆவணங்களும் இல்லாததால், மகாலட்சுமி லேஅவுட் போலீசாரும், வருமான வரித்துறையினரும் இந்த பணத்தின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


















