
தெஹ்ரான், ஜூலை 3- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகளில், அவரது மகனும் ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ளவருமான மொஜ்தபா கமேனி கலந்து கொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து அரசியல் தலைவர்கள் பலர் இந்த இறுதி சடங்கில் பங்கேற்கும் நிலையில், சொந்த மகன் பங்கேற்காதது ஏன் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். பாதுகாப்பு காரணங்கள் மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மொஜ்தபா கமேனியின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், ஈரான் வேறு வழியின்றி இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. இந்தியாவில் உள்ள ஈரானிய உச்ச தலைவரின் பிரதிநிதியான அயதுல்லா ஹக்கீம் இலாஹி, இந்தியா டுடேவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இஸ்ரேலுடனான பதற்றம் உச்சத்தில் இருப்பதால், மொஜ்தபா கமேனியின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் சமீபத்தில் மொஜ்தபா கமேனியை தாக்குவோம் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், அவர் பொதுவெளியில் தோன்றுவது ஆபத்தானது எனக் கருதப்படுகிறது. முன்னதாக, அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் அலி கமேனியுடன் சேர்ந்து மொஜ்தபா கமேனியின் மனைவி சஹ்ரா ஹதாத்-ஆடெலும் கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கிலும் மொஜ்தபா கமேனி பங்கேற்கவில்லை. எனவே தற்போது தந்தையின் இறுதி சடங்கிலும் மொஜ்தபா பங்கேற்காமல் தவிர்த்திருக்கிறார். ஈரானில் ஒரு வார காலத்திற்கு இறுதிச் சடங்கு ஊர்வலங்கள் நடைபெற உள்ள நிலையில், நாட்டின் புதிய தலைவரே தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் நிலவுவது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளனர். ஈரானியத் தலைவர்களுக்கு எதிராக ஏதேனும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால், அதற்குப் பலத்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


















