
புதுடெல்லி: ஜூலை 3-
அமெரிக்கா, இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க சந்தையில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் ஆகும். அண்டை நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைவிட இந்தியாவுக்கு கூடுதல் போட்டித் தன்மையை வழங்குவதற்கான சட்ட ரீதியான வழிமுறைகளை அமெரிக்கா கண்டறிய வேண்டும். பல்வேறு பொருட்களுக்கான சலுகைகள், வர்த்தக தடைகளை நீக்குதல் போன்ற 99% அம்சங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
இன்னும் 1% விவகாரத்தில் மட்டுமே முடிவு எட்டப்பட வேண்டும். இது மிகவும் நியாயமான, மிகவும் சமமான ஒப்பந்தம். இரு நாடுகளுக்கிடையிலான நேர வித்தியாசம் காரணமாக சில நேரங்களில் இரவில் விழித்திருக்க வேண்டியிருந்தது. நான் பொதுவாகவே தாமதமாக தூங்குவதால் எனக்கு அது பிரச்சினையாக இல்லை. ஆனால் எனது குழுவினர் நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தியதால் சற்று சிரமப்பட்டனர். மற்றபடி எந்த அழுத்தமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.




















