
சென்னை, ஜூலை 4- ஐபிஎல் 2027 தொடருக்கான மெகா ஏலம் நெருங்கி வரும் வேளையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கான ஒரு பலமான ‘கனவு’ பிளேயிங் லெவனை முன்னாள் இந்திய வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் தேர்வு செய்துள்ளார். இந்த அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இரு சிறந்த ஆல்ரவுண்டர்களை அவர் சேர்த்துள்ளார். என்னது சிஎஸ்கே அணியில் ஹர்திக் பாண்டியா, பென் ஸ்டோக்ஸ்-ஆ? எப்படி சாத்தியம்? இது பற்றி பத்ரிநாத்தே பேசி இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலக விரும்புவதாக வெளியாகும் செய்திகள் ஐபிஎல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய பத்ரிநாத், மும்பை அணி ஹர்திக் பாண்டியாவை சாதாரணமாக விட்டுக்கொடுக்காது என்றும், அதற்குப் பதிலாக சிஎஸ்கே அணி சிவம் துபே-வை மும்பைக்கு கொடுத்து ஹர்திக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் யோசனை தெரிவித்துள்ளார்.அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் ஏலத்தின் மூலம் சிஎஸ்கே அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார். பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரையும் சிஎஸ்கே அணி தனது பிளேயிங் லெவனில் இணைத்தால் அது சிஎஸ்கே-வுக்கு ஒரு கனவு அணியாக இருக்கும் என்று அவர் கூறினார். அதே சமயம், ஹர்திக் பாண்டியாவுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியே மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்றும் பத்ரிநாத் தெரிவித்தார். கொல்கத்தா அணிக்கு தற்போது ஒரு சிறந்த ஆல்ரவுண்டர், கேப்டன் மற்றும் மூத்த வீரர் தேவைப்படுவதால் ஹர்திக் அங்கு செல்வது சரியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளைத் தவிர மற்ற அனைத்து அணிகளும் ஹர்திக்கை வாங்க ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் கூறினார்.பத்ரிநாத் தேர்வு செய்த சிஎஸ்கே கனவு அணி: சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், உர்வில் படேல், கார்த்திக் சர்மா, டெவால்ட் பிரெவிஸ், பென் ஸ்டோக்ஸ், ஹர்திக் பாண்டியா, ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது.





















