Home மாவட்டங்கள் பெங்களூர் குடியிருப்பில் வளர்க்கப்பட்டமலைப் பாம்புகள் பறிமுதல்

குடியிருப்பில் வளர்க்கப்பட்டமலைப் பாம்புகள் பறிமுதல்

பெங்களூரு, ஜூலை 4-
பெங்களூரு காமாக்ஷிபாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு (அபார்ட்மெண்ட்) ஒன்றில், சட்டவிரோதமாக மலைப்பாம்புகள் வளர்க்கப்பட்டு வந்த திடுக்கிடும் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வனத்துறை அதிகாரிகளும் போலீசாரும் நடத்திய அதிரடி வேட்டையில் இந்த கும்பல் பிடிபட்டது.
காமாக்ஷிபாளையத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பிளாட்டில் கடந்த சில நாட்களாக மர்ம நபர்களின் நடமாட்டம் இருந்துள்ளது. உள்ளே ஏதோ விசித்திரமான நடவடிக்கைகள் நடப்பதை கவனித்த அக்கம் பக்கத்தினர், தங்களின் பாதுகாப்பு கருதி வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, நேற்று நள்ளிரவு வனத்துறை அதிகாரிகள் அந்த பிளாட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர். அப்போது, வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை மீறி, எவ்வித அனுமதியும் இன்றி ரகசியமாக மலைப்பாம்புகள் வளர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டின் மூலை முடுக்குகளையெல்லாம் சோதித்தபோது, சாதாரண கார்ட்போர்டு பெட்டிகளுக்குள் இந்த ஆபத்தான மலைப்பாம்புகள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். குடியிருப்பு பகுதியில் இவ்வளவு ஆபத்தான முறையில் பாம்புகள் வைக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காமாக்ஷிபாளையம் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், பிளாட்டில் இருந்தவர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். பிடிபட்ட நபர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. குடியிருப்பு பகுதியில் விலங்குகளை சட்டவிரோதமாக வளர்த்த குற்றத்திற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மலைப்பாம்புகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டன? இதன் பின்னணியில் சர்வதேச வனவிலங்கு கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? அல்லது விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதா? என்ற கோணத்தில் வனத்துறையினரும் போலீசாரும் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.