Home மாவட்டங்கள் பெங்களூர் நின்று கொண்டிருந்த பஸ் மீதுமோதிய பஸ் – பயணிகள் படுகாயம்

நின்று கொண்டிருந்த பஸ் மீதுமோதிய பஸ் – பயணிகள் படுகாயம்

பெங்களூரு, ஜூலை 4:
பெங்களூரு நகரின் மையப்பகுதியான கே.ஆர்.சர்க்கிள் சந்திப்பில் இன்று காலை இரண்டு அரசு பேருந்துகள மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உட்பட பல பயணிகள் படுகாயமடைந்தனர். விதான் சௌதாவுக்கு மிக அருகில் உள்ள கே.ஆர்.சர்க்கிள் சிக்னலில் இன்று காலை (வோல்வோ) ஏசி பேருந்து நின்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு சாதாரண அரசு பேருந்து, எதிர்பாராதவிதமாக அதன் பின்புறம் பலத்த சத்தத்துடன் மோதியது. மோதிய வேகத்தில் சாதாரண பேருந்தின் முன்பகுதி அப்படியே நொறுங்கியது. இதில் பேருந்து ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், முன்பக்க சீட்டில் அமர்ந்திருந்த பெண் பயணி ஒருவரின் கால் இரும்பு இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டது. வலியால் அவர் அலறியடித்த நிலையில், அங்கிருந்தவர்கள் இரும்பு கம்பிகளை கஷ்டப்பட்டு வெட்டி எடுத்து அவரை மீட்டனர்.
காலை நேரம் என்பதால் அலுவலகம் செல்வோர் பேருந்தில் கூட்டமாக இருந்ததால் விபத்து நடந்ததும் பயணிகள் அலறினர். இடிபாடுகளுக்குள் சிக்கிய பல பயணிகள் வெளியே வர முடியாமல் தவித்த நிலையில், உடனே ஓடிவந்த உள்ளூர் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து காயமடைந்தவர்களை மீட்டனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விபத்துக்குள்ளான பேருந்துகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர்செய்தனர். பிரேக் பழுதடைந்ததால் விபத்து நடந்ததா அல்லது ஓட்டுநரின் அலட்சியமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, விதான் சௌதா சிக்னல் அருகே மற்றொரு அரசு பேருந்து மோதியதில் ஒரு காரின் பின்புறம் முற்றிலும் சேதமடைந்தது. நல்ல வேளையாக காரில் இருந்த 3 பேரும் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து கப்பன் பார்க் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.