Home விளையாட்டு மெக்சிகோவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி கால் இறுதியில் கால்பதித்தது இங்கிலாந்து

மெக்சிகோவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி கால் இறுதியில் கால்பதித்தது இங்கிலாந்து

மெக்சிகோ சிட்டி: ஜூலை 7- பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நேற்று மெக்சிகோ நகரிலுள்ள புகழ்பெற்ற அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து – மெக்சிகோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி எல்லைக்குள் தூக்கி அடிக்கப்பட்ட பந்தை மெக்சிகோவின் ஜிமினெஸால் துரத்திப் பிடிக்க முடியாமல் போனது.
இதையடுத்து இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்ஃபோர்ட் பந்தை வேகமாக எறிந்து டெக்லான் ரைஸை நோக்கி ஓடவிட்டார். டெக்லான் ரைஸ் உடனடியாக பந்தை புகாயோ சாகாவுக்கு தட்டிவிட்டார். சாகா அடித்த கிராஸ் ஹாரி கேனை கடந்து, பின் பகுதியில் எவராலும் மார்க் செய்யப்படாமல் இருந்த ஜூட் பெல்லிங்ஹாம் வசம் சென்றது. அவர், பந்தைத் தலையால் முட்டி கோல் வலைக்குள் செலுத்தினார். இதனால் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்த 2-வது நிமிடத்தில் ஜூட் பெல்லிங்ஹாம் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
38-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் எலியாட் ஆண்டர்சன் மெக்சிகோவின் மோராவிடமிருந்து பந்தை சாதுரியமாகப் பறித்து பெல்லிங்ஹாமை நோக்கித் தட்டிவிட்டார். அவர், அதை ஹாரி கேனிடம் கடத்த அவர், கோல் கம்பத்துக்கு மிகு அருகிலிருந்தவாறு பந்தை கோல் வலைக்குள் எளிதாகத் தட்டிவிட்டார். இதனால் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
42-வது நிமிடத்தில் மெக்சிகோ அணியின் வீரர் அல்வராடோ ஃப்ரீ-கிக்கில் உதைத்த பந்து இங்கிலாந்து வீரர்களின் மீது பட்டு திசைமாறியது. அப்போது மெக்சிகோவின் ஜூலியன் குயினோன்ஸ் பந்து தரையில் படுவதற்குள் ஒரு அசுரத்தனமான ஷாட் அடித்து பந்தை கோல் வலைக்குள் திணித்தார். 54-வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ஜீசஸ் கல்லார்டோவை ஃபவுல் செய்தார் இங்கிலாந்தின் குவான்சா.
இதனால் அவருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். இதன் காரணமாக இங்கிலாந்து அணி 10 வீரர்களுடன் விளையாடியது. 60-வது நிமிடத்தில் மெக்சிகோ அணியின் கோல் கீப்பர் ரவுல் ரான்ஜெல் தனது இடத்தில் இருந்து முன்னேறி வந்து பந்தை தடுக்க முயன்ற போது இங்கிலாந்தின் அந்தோனி கோர்டானை ஃபவுல் செய்தார்.
இதனால் இங்கிலாந்து அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஹாரி கேன் கோல் அடிக்க இங்கிலாந்து அணி 3-1 என முன்னிலை பெற்றது. 69-வது
நிமிடத்தில் மெக்சிகோ வீரர் குட்ரெஸை, ஹாரி கேன் ஃபவுல் செய்தார். இதனால் மெக்சிகோ அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதை ரவுல் ஜிமென்ஸ் கோலாக மாற்றினார். இதனால் மெக்சிகோ அணி 2-3 என நெருங்கியது.இதன் பின்னர் ஆட்டத்தின் கடைசி 21 நிமிடங்களிலும், காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 11 நிமிடங்களிலும் மெக்சிகோ அணி ஆக்ரோஷமாகத் தாக்குதல்களை நடத்தியது. இருப்பினும், இங்கிலாந்து கோல்கீப்பர் ஜோர்டான் பிக்ஃபோர்ட் மற்றும் இங்கிலாந்தின் தற்காப்பு வீரர்கள் உறுதியாக நின்று மெக்சிகோ அணியின் கோல் அடிக்கும் முயற்சிகளை முறியடித்தனர். முடிவில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றில் கால்பதித்தது. வரும் 6-ம் தேதி நடைபெறும் கால் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து அணி, நார்வேயுடன் பலப்பரீட்சை நடத்துகிறது