
சென்னை: ஜூலை 8-
தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது 4,048 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். இந்த கடைகளில் விஸ்கி, பிராந்தி, வோட்கா, ரம் போன்ற இந்திய தயாரிப்பு வெளிநாட்டு வகை மதுபானங்கள், பீர், ஒயின் உள்ளிட்ட மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலையை உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, சாதாரண மற்றும் நடுத்தர வகை வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் பீர் உள்ளிட்டவற்றின் விலையை ரூ.10 முதல் ரூ.50 வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற டாஸ்மாக் நிர்வாகத்தின் வாரிய கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ், அரசு உயரதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் இது குறித்து விவாதித்துள்ளனர். மேலும் பார் உரிமம் 2 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய டெண்டர் அறிவிப்பு மற்றும் அதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இருப்பினும், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை மற்றும் உயர்வின் அளவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தமிழகத்தில் கடைசியாக கடந்த 2024 பிப்ரவரி 1-ம் தேதி மது விலைகள் ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள்
கூறியதாவது: தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றவுடன், இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் பீர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பெட்டிக்கும் கூடுதல் கட்டணம் நிர்னயித்தது. இதனால் உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாகக் கூறி, மதுபான ஆலை மற்றும் பீர் உற்பத்தியாளர்கள் சில்லறை விலையை உயர்த்துமாறு அரசிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதை அரசு உடனடியாக ஏற்கவில்லை என்றாலும், இந்த விவகாரம் டாஸ்மாக் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


















