
ஜம்மு: ஜூலை 8-
ஜம்மு காஷ்மீரில் 5 நாட்களில் அமர்நாத் யாத்திரைக்கு 1.13 லட்சம் பக்தர்கள் வருகை தந்து சாதனை படைத்தனர்.யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீரில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில், கடல் மட்டத்தில் இருந்து, 12,730 அடி உயரத்தில் சிவபெருமானின் அமர்நாத் குகைக்கோவில் அமைந்துள்ளது.
இந்தக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான அமர்நாத் யாத்திரை, கடந்த 3ல் தொடங்கியது. அடுத்த மாதம், 28 வரை யாத்திரை நடக்க உள்ளது. கடந்த 5 நாட்களில் அமர்நாத் யாத்திரைக்கு 1.13 லட்சம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.இது குறித்து ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கூறியதாவது: புனித யாத்திரையை அனைவருக்கும் உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவமாக மாற்றுவதும்,
அவர்களுக்குச் சாத்தியமான சிறந்த வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதும் எங்கள் இலக்காகும்.
இதுவரை, 1.13 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித குகையில் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் அனைவரும் தடையற்ற தரிசனம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


















