
வயநாடு: ஜூலை 8-
கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி மாயமான 5 தொழிலாளர்களைத் தேடும் பணி 2-வது நாளாக இன்றும் ராணுவ உதவியுடன் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, வயநாடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதலே கனமழை கொட்டித் தீர்த்து வருவதால் மீட்புப் பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
வயநாடு மெப்பாடி அருகே புதிய சுரங்கப் பாதை சாலை அமைக்கும் பணி கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்தது. சம்பவத்தன்று தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மேலே இருந்த ராட்சத மலைக் குன்று ஒன்று திடீரென சுனாமி பேரலை போல பயங்கர சத்தத்துடன் சரிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் அங்கே வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்தபடி ஓடினர். எனினும், டன் கணக்கிலான மண் மற்றும் பாறைகளுக்கு அடியில் சிக்கி 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்து மாயமாகினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் போர்க்கால அடிப்படையில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். ஆனால், விபத்து நடந்த இடத்தில் நிலம் உள்வாங்கி, மீண்டும் மீண்டும் மண் சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது. இதனால், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் பெரும் சவாலாக மாறியுள்ளது.


















